வேலூர்

வேலூரில் காதல் திருமணத்தை பதிவு செய்ய ரூ.10 ஆயிரம் இலஞ்சம் கேட்ட அதிகாரிகளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்தும் வாங்காமல் அடம் பிடித்து திருமணத்தைப் பதிவு செய்ய மறுத்துள்ளனர்.

வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த கொத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தானம் (27). இவர், வாணியம்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.

இவரும், தாமலேரிமுத்தூர் பகுதியைச் சேர்ந்த கிரிஜாவும் (23) காதலித்து வந்துள்ள நிலையில், இவர்களது காதலுக்கு இரண்டு வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனையடுத்து நேற்று இருவரும் திருப்பத்தூரை அடுத்த பசலிக்குட்டை பகுதியில் உள்ள முருகன் கோயிலில் திருமணம் செய்துகொண்டனர். இந்த திருமணத்தைப் பதிவு செய்ய திருப்பத்தூர் சார்-பதிவாளர் அலுவலகத்திற்கு இருவரும் மணக்கோலத்தில் சென்றனர்.

அங்கு, திருமணப் பதிவுக்கான ஆவணங்களை சமர்ப்பித்தபோது,  பதிவு செய்ய ரூ.10 ஆயிரம் தர வேண்டும் என அங்குள்ள அதிகாரிகள் கேட்டுள்ளனர். தங்களிடம் உள்ள ரூ.5 ஆயிரத்தைக் கொடுத்தபோது, அதிகாரிகள் அதை வாங்க மறுத்துள்ளனர். மேலும், காதல் தம்பதியரை காலை 10 முதல் மாலை 6 மணி வரை காக்கவைத்து திருப்பி அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, காதல் தம்பதியினர் சார்-ஆட்சியர் பி.பிரியங்கா பங்கஜத்திடம், திருமணப் பதிவுக்கு இலஞ்சம் கேட்டதாக அதிகாரிகள் மீது புகார் அளித்தனர். பின்னர், இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி காதலர்கள் விருப்பப்படி வாழ்வதற்கு ஏற்பாடு செய்யுமாறு சார்-ஆட்சியர், திருப்பத்தூர் நகர காவலாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனபேரில் காவலாளர்கள் இரு வீட்டாரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி, காதல் தம்பதியரை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சார்-பதிவாளர் அலுவலகத்தில் பசலிக்குட்டை கிராமம் மற்றும் பெருமாப்பட்டு மதுரா ஜலகாம்பாறை முருகன் கோயிலில் நடைபெறும் திருமணங்கள் இந்த அலுவலகத்தில் பதிவு செய்யப்படமாட்டாது என்று அறிவிப்பு ஒட்டப்பட்டது.

இந்த திடீர் அறிவிப்பு குறித்து சார்-ஆட்சியரிடம் கேட்டதற்கு, ""குறிப்பாக ஒரு சில கோயில்களில் மட்டும் நடைபெறும் திருமணத்திற்கு பதிவு மேற்கொள்ளப்படமாட்டாது" என்று அறிவிப்பு செய்தது தொடர்பாக விசாரித்து வருகிறேன். அதில் தவறு கண்டறியப்பட்டால் துறை சார்ந்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.