Now you have closed the alcoholic shop the next big fight will happen - people alert ...

அரியலூர்

அரியலூரில் உள்ள சாராயக் கடையை மூட வேண்டும் போராடிய மக்கள், “இப்போ சாராயக் கடையை மூடாவிட்டால், அடுத்து பெரிய அளவில் போராட்டத்தைத் தொடருவோம்” என்று அதிரடியாக எச்சரிக்கை விடுத்தனர்.

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அடுத்துள்ளது கோடாலி கிராமம். இங்கு செயங்கொண்டம் - அணைக்கரை சாலையில் டாஸ்மாக் சாராயக் கடை ஒன்று செயல்படுகிறது.

இந்த டாஸ்மாக் சாராயக் கடையை மூட வேண்டும் என்று நேற்று டாஸ்மாக் சாராயக் கடையை முற்றுகையிட்டு மக்கள் திரளாக போராட்டம் நடத்தினர்.

அப்போது டாஸ்மாக் சாராயக் கடை முன்பு பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

அப்போது மக்கள், “எங்களின் கோரிக்கையை ஏற்று கோடாலி கிராமத்தில் செயல்படும் டாஸ்மாக் சாராயக் கடையை மூட அரசு முன் வர வேண்டும். இக்கடையானது மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியில் அமைந்திருக்கிறது. இதனால், பெண்கள் மற்றும் மாணவர்கள் நடமாட முடியவில்லை. சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படுகிறது. குடிமகன்களால் அதிகளவில் விபத்து ஏற்பட்டு அப்பாவி மக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே மக்களின் கோரிக்கையை ஏற்று அரசு இக்கடையை மூட வேண்டும். அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அடுத்த கட்டப் போராட்டத்தை பெரிய அளவில் நடத்துவோம்” என்றுக் கூறினர்.

இதுகுறித்து தகவலறிந்த செயங்கொண்டம் துணை காவல் கண்காணிப்பாளர் கென்னடி, செயங்கொண்டம் தாசில்தார் திருமாறன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

பேச்சுவார்த்தையை அடுத்து அதிகாரிகள், இந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் சாராயக் கடையை அகற்றுவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

அதன்பேரில், அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.