நீலகிரி

விரைவில் கூகுள் வரைபடத்தில் மலை இரயில் பாதை மற்றும் அதன் இரயில் நிலையங்கள் இடம் பெற உள்ளது. இதனையொட்டி சிறப்பு இரயிலில் வந்த அதிகாரிகள் சுழலும் கேமராவுடன் மலை இரயில் பாதையை படம் பிடித்தனர்.

நீலகிரி மாவட்டம், ஊட்டியில் மலை பாதையில் ஓடும் அழகிய மலை இரயிலும், தாவரவியல் பூங்காவும் சிறப்பு. ஊட்டிக்கு சுற்றுலா வரும் பயணிகள் மலை இரயிலில் பயணம் செய்ய வெகுவாக விரும்புவர். 

நூற்றாண்டு பழமை வாய்ந்த மலை இரயில் பாதை மேட்டுப்பாளையத்தில் தொடங்கி ஊட்டியில் முடிவடைகிறது. இந்த இரயில் பாதையில் கல்லார், இல்குரோவ், இரன்னிமேடு, குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, கேத்தி, லவ்டேல், ஊட்டி ஆகிய ரெயில் நிலையங்கள் உள்ளன. 

மலைப்பாதை தொடங்கும் இடமான கல்லார் முதல் குன்னூர் வரை இரயிலின் பாதுகாப்பு கருதி பல் சக்கர தண்டவாளம் அமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் கொண்டுவரப்பட்ட மலை இரயில் பாரம்பரிய சிறப்புப் பெற்று யுனெஸ்கோவில் இடம் பெற்றுள்ளது. 

புகழ்பெற்ற இந்த மலை இரயில் பாதை கூகுள் வரைபடத்தில் இடம் பெற கூகுள் நிறுவனம் முடிவு செய்தது. இதனைத் தொடர்ந்து கூகுள் நிறுவனத்தை சேர்ந்த மூன்று அதிகாரிகள் கொண்ட குழுவினர் நேற்று மேட்டுப்பாளையத்திலிருந்து சிறப்பு இரயிலில் ஊட்டிக்குப் புறப்பட்டனர். 

இந்த சிறப்பு இரயிலில் மூன்று பெட்டிகள் இருந்தன. இதில் ஒரு பெட்டியில் நான்கு புறங்களிலும் படம் எடுக்க வசதியாக சுழலும் கேமரா அமைக்கப்பட்டு இருந்தன. 

நிறுவன அதிகாரிகள் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையுள்ள மலை இரயில் பாதை மற்றும் இரயில் நிலையங்களை வரைபடத்திற்காக குறிப்பு எடுத்துக் கொண்டனர். இரன்னிமேடு இரயில் நிலையத்தையும், மலை பாதையில் இரயில் செல்லும் இடத்தையும் அதிகாரிகள் குறிப்பும், சுழலும் கேமராவிலும் படமும் எடுத்து கொண்டனர். 

விரைவில் கூகுள் வரைபடத்தில் மலை இரயில் பாதை, அதன் இரயில் நிலையங்கள் இடம் பெறும்.