நீங்கள் பின் வரும் இந்த ஊர்களில் இருக்கிறீர்களா? அப்படியெனில், இனி பட்டா சிட்ட வாங்குவதற்கு, சர்வே டாகுமெண்ட் பெறுவதற்கு என்று அரசு அலுவலகங்களுக்கு நடையாய் நடந்து அலைய வேண்டியிருக்காது. காரணம், அனைத்தையும் இணையத்தில் ஏற்றி, எளிதில் வீட்டில் இருந்தோ, சேவை மையங்கள் மூலமாகவோ கணினி வழியில் டவுன் லோட் செய்து கொள்ள வசதியாக அரசு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. 

இதற்காக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் முதல் கட்டமாக தமிழகத்திலுள்ள 21 மாவட்டங்களைச் சார்ந்த 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம் கணினிப்படுத்தப்பட்ட நிலஅளவை புலவரைபடங்களை http://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்வதற்கான  இணையவழி சேவையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று துவக்கி வைத்துள்ளார். 

தமிழ்நாட்டில் இதுவரை 286 வட்டங்களின் நில ஆவணங்கள் இணையவழிப் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.  இதன் பலனாக, பொதுமக்கள் வீட்டில் இருந்தவாறோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ தங்களது பட்டா / சிட்டா மற்றும் ‘அ’ பதிவேடு நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ள இயலும். 

மேலும், பொதுமக்கள் வட்ட அலுவலகங்களை தேடிச் செல்ல வேண்டிய அவசியமின்றி, இணையம் மூலமாகவே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்க இயலும். இதனால் தேவையற்ற செலவும், காலவிரயமும் தவிர்க்கப்படுகிறது. இப்பணியின் அடுத்த கட்டமாக புல வரைபடங்களை கணினி மயமாக்கியுள்ளனர். அதன்படி,  புலவரைபடங்களை கணினிப்படுத்தும் பணி ‘கொலாப்லேண்ட்’ எனும் மென்பொருள் மூலம் 2004-ஆம் ஆண்டு சோதனை அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் துவக்கப்பட்டு, படிப்படியாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. 

அதன் தொடர்ச்சியாக, மொத்தமுள்ள 55.33 இலட்சம் புலவரைபடங்களில் 54.12 இலட்சம் புல வரைபடங்கள் இது வரை கணினிப்படுத்தப்பட்டுள்ளன.

தற்போது, கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் வடக்கு, மதுக்கரை, மேட்டுப்பாளையம், 
தருமபுரி மாவட்டம் - பாப்பிரெட்டிபட்டி, தருமபுரி, நல்லம்பள்ளி, அரூர், 
திண்டுக்கல் மாவட்டம் - நத்தம், 
ஈரோடு மாவட்டம் - அந்தியூர், பவானி, தாளவாடி, 
காஞ்சிபுரம் மாவட்டம் - உத்திரமேரூர், 
கன்னியாகுமரி மாவட்டம் - தோவாளை, 
கரூர் மாவட்டம் - கடவூர், 
மதுரை மாவட்டம் - மதுரை மேற்கு, 
நாமக்கல் மாவட்டம் - ராசிபுரம், பரமத்திவேலூர், குமாரபாளையம், 
நாகப்பட்டினம் மாவட்டம் - திருக்குவளை, 
பெரம்பலூர் மாவட்டம் - பெரம்பலூர், ஆலத்தூர், வேப்பந்தட்டை, 
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை, 
சேலம் மாவட்டம் - சங்ககிரி, மேட்டூர், எடப்பாடி, 
நீலகிரி மாவட்டம் - குன்னூர், கோத்தகிரி, 
தேனி மாவட்டம் - தேனி, 
திருச்சிராப்பள்ளி மாவட்டம் - ஸ்ரீரங்கம், 
திருநெல்வேலி மாவட்டம் - சிவகிரி, செங்கோட்டை, 
திருப்பூர் மாவட்டம் - பல்லடம், திருப்பூர் தெற்கு, அவிநாசி, 
திருவள்ளூர் மாவட்டம் - பூவிருந்தவல்லி, ஊத்துக்கோட்டை, திருத்தணி, திருவொற்றியூர், மதுரவாயல், 
திருவண்ணாமலை மாவட்டம் - ஆரணி, 
விழுப்புரம் மாவட்டம் - வானூர் 
-  ஆகிய 43 வட்டங்களுக்குரிய 24.11 லட்சம்  கணினிப்படுத்தப்பட்ட புல வரைபடங்களை இணைய தளம் வாயிலாக பொதுமக்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இதுமட்டுமின்றி, எஞ்சிய 247 வட்டங்களின் புல வரைபடங்களும் ஜுன் 2018-க்குள் பல கட்டங்களாக இணையவழி பராமரிப்பிற்கு கொண்டு வரப்படவுள்ளன. இப்பணி நிறைவு பெற்றவுடன் அனைத்து பட்டாதாரர்களும் பயனடைவர் என்றும்,  இதன்மூலம், பொதுமக்கள் தங்களது பட்டா மற்றும் ‘அ’ பதிவேடு நகல்களுடன் புலவரைபடங்களையும் http://eservices.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் அரசு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும்,  நத்தம் மற்றும் நகர நில ஆவணங்களும் தற்போது கணினிப் படுத்தப் பட்டுள்ளதாகவும், அவையும் விரைவில் இணையவழி பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும் அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.