பயணிகளின் நலன் கருதி அனைத்து ரயில்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ரயில்வே ஐஜி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் ரயில்களில் அடிக்கடி குற்றச்செயல்கள் அதிகரித்து வருவதாக ரயில்வேத்துறைக்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில், ராமேஸ்வரத்திற்கு நேற்று தெற்கு ரயில்வே ஐஜி எஸ்.சி.பார்ஹி வந்தார்.  அப்போது, ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன், பிளாட்பாரங்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். 

இதையடுத்து பாம்பன் ரயில் பாலத்தையும் பார்வையிட்டு அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினார். 

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ரயிலில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும்  ரயில்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதால் அனைத்து ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களிலும் குற்றங்களை தடுக்கும் வகையில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

கேமரா பொருத்தும் பணிகள் ஒரு ஆண்டுக்குள் முடியும் எனவும்  குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் எனவும் குறிப்பிட்டார். 

மேலும்  ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் 15 நாட்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி முடிந்து செயல்பட துவங்கும் என தெரிவித்தார்.