இரட்டைஇலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும், உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்சினையோ தடையோ இல்லை எனவும், கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்ததும் தினகரன் அணியும் ஒபிஎஸ் அணியும் இரட்டை இலை சின்னத்திற்காக போட்டியிட்டனர்.

இதனால் இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இதையடுத்து ஒபிஎஸ் அணியும் எடப்பாடி அணியும் இரட்டை இலை சின்னம் தங்களுக்கே சொந்தம் என தேர்தல் ஆணையத்தில் பிரமானப்பத்திரங்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

இதனிடையே உள்ளாட்சி தேர்தலை விரைவில் நடத்த வேண்டும் என தமிழக அரசையும் மாநில அரசையும் உயர்நீதிமன்றம் வலியுறுத்தி வருகிறது.

இந்நிலையில், மதுரை ஜடாமுனிகோவில் தெருவில் நடைபெற்ற ஆடி சிறப்பு கைத்தறி கண்காட்சியை அமைச்சர் ஒ.எஸ் மணியன் துவங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒரு பிரச்சினையோ தடையோ இல்லை எனவும், இரட்டைஇலை சின்னம் இல்லாமல் உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தயாராக இருப்பதாகவும்  தெரிவித்தார்.