பெரம்பலூர்

பெரம்பலூரில் ஒரு சொட்டு குடிநீர் கூட இல்லை என்றும், சீரான குடிநீர் விநியோகம் வழங்க வேண்டும் என்று கோரியும் காலி குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் பொம்மனப்பாடி என்ற கிராமத்தில் வறட்சியின் காரணமாக குடிநீர் கிணறுகளில் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. இதனால் கடந்த 20 நாள்களுக்கு மேலாக குடிநீர் விநியோகம் செய்யப்படாமல் குடிநீருக்காக அந்த பகுதி மக்கள் பெரிதும் தவித்து வருகின்றனர்.

எனவே, பாதிக்கப்பட்ட கிராம மக்கள் காலி குடங்களுடன் நேற்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டம் குறித்து தகவல் அறிந்த பாடாலூர் காவலாளர்கள், ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையை மேற்கொண்டனர்.

அப்போது மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டியில் உள்ள குடிநீர், அருகில் உள்ள வயலுக்கு பாய்ச்சப்படுவதாக புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையின் முடிவில் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன் பின்னரே, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டனர்.

இதனால் செட்டிக்குளம் – பெரம்பலூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.