எண்ணூர் கடலில் குளித்த வடமாநில இளைஞர்கள்..! ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம் - மீட்பு பணி தீவிரம்
எண்ணூர் கடலில் குளிக்க சென்ற வடமாநில இளைஞர்கள் ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து 4 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கடலில் குளித்த வட மாநில இளைஞர்கள்
சென்னையில் பல்வேறு இடங்களில் வட மாநில இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி விடுமுறை காரணமாக எண்ணூர் ஆண்டாள் குப்பம் பகுதியில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த ஊழியராக பணி புரிந்து வரும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த 16 தொழிலாளர்கள் கடற்பகுதிக்கு வந்து குளித்துள்ளனர். இவர்கள் கடலில் குளித்து கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட ராட்சத அலையில் 4 பேரும் சிக்கி தத்தளித்ததாக கூறப்படுகின்றது. மேலும், சிறிது நேரத்தில் அவர்கள் 4 பேரும் கடல் நீரில் மூழ்கி மாயமாகி உள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்களது நண்பர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
ராட்சத அலையில் சிக்கி 4 பேர் மாயம்
இதனைத் தொடர்ந்து காவல் துறையினர் எண்ணூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்து சம்பவ இடத்திற்கு விரைந்தனர். கடல் அலையில் சிக்கி காணமல் போயிருக்கும் முஸ்தகீன்(22), இப்ராஹிம்(22), வஷீம்(26), புர்சான்(28) ஆகிய நால்வரையும் மீட்கும் பணியை தீயணைப்பு துறையினர் தீவிரப்படுத்தினர். நேற்று மாலை வரை தேடியும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இரவு நேரமாகிவிட்டதாலும், அலையின் வேகம் அதிகரித்து இருப்பதாலும் மீட்பு பணியில் தொய்வ ஏற்பட்டது. ஏற்கனவே இந்த பகுதிகள் பலமுறை இது போன்று கடல் குளிக்க சென்றவர்கள் அலையில் சிக்கி மாயமாகியுள்ளனர். இந்த பகுதியில் குளிக்க வேண்டாம் என போலீஸார் அவ்வபோது எச்சரிக்கை விடுத்தும் அதையும் மீறி இளைஞர்கள் குளிக்க சென்று உயிரை இழக்கும் நிலை நாள் தோறும் ஏற்படுவதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படியுங்கள்