இயல்பை விட 62 சதவீதம் மழை குறைவு…தமிழகத்தில் கடும் வறட்சி அபாயம்

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த அக்டோபர் மாதம் 30-ந் தேதி வட கிழக்கு பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை தொடங்கி ஒரு சில நாட்கள் மட்டுமே மழை பெய்தது.

அதுவும் மிகச் சாதாரண அளவே பெய்தது. பெரும்பாலான மாவட்டங்களில் வறண்ட வானிலையே காணப்பட்டது. பொதுவாக பரவலாக மழை பெய்யவில்லை. கனமழையாகவும் பெய்யவில்லை. இதனால் வட கிழக்கு பருவமழை பொய்த்து போனது. 

அதே நேரத்தில் வங்க கடலில் உருவான வர்தா புயல் சென்னை துறைமுகத்தை கடந்த மாதம் டிசம்பர் 12-ந் தேதி கரையை கடந்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் விழுந்தன. அன்று ஒரு  சில இடங்களில் மட்டுமே மழை பெய்தது. அதன் பிறகு மழை அவ்வளவாக பெய்யவில்லை. 

வட கிழக்கு பருவமழை பொய்த்து போனதால் தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் நடைபெறவில்லை. அடுத்த ஓரிரு மாதங்களில் சென்னை நகரில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது. 

வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை கணக்கிடப்படும். சில வருடங்களில் ஜனவரி 5-ந் தேதி வரை கூட நீடிப்பது உண்டு. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்து விட்டது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன், தென்னிந்திய பகுதிகளில் வறண்ட வானிலை மற்றும் வலு குறைந்த காற்று தொடர்ந்து வீசுகின்றன. இதையடுத்து தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகம், ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வட கிழக்கு பருவமழை முடிந்துவிட்டது என தெரிவித்தார். 

இந்த ஆண்டு வட கிழக்கு பருவமழை காலத்தில் சராசரி அளவை அல்லது இயல்பான அளவை விட 62 சதவீதம் குறைவாக மழை பெய்துள்ளது என்றும் அதாவது 44 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டிய நிலையில் வெறும்  17 சென்டி மீட்டர் மழை தான் பெய்துள்ளது என கூறினார்.

அதேபோல வடகிழக்கு பருவமழை காலத்தில் சென்னையில் 78 சென்டி மீட்டர் மழை பெய்ய வேண்டும். ஆனால் நடந்து முடிந்த வடகிழக்கு பருவமழையின்போது 34 சென்டி மீட்டர் மழை தான் பெய்துள்ளது. அதாவது 57 சதவீதம் குறைவாக பெய்துள்ளது என தெரிவித்தார். 

கடந்த ஆண்டு சென்னை, திருவள்ளூர்,கடலுர்,காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடுமையான சேதத்தை விளைவித்தது. இந்த ஆண்டு கன மழை இல்லாவிட்டாலும் வர்தா புயலால் சென்னை கடும் சேதத்தை சந்தித்தது.

ஏற்கனவே சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்மட்டம் மிகக் குறைவாக இருப்பதால் அடுத்த இரு மாதங்களில் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இதே போன்று தமிழகத்தின் பிற மாவட்டங்களில் கடுமையான வறட்சிநிலவுகிறது.நாமக்கல் மாவட்டத்தில் சராசரி அளவைவிட 82 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

இதனால் தமிழகம் இந்த ஆண்டு கடுமையான வறட்சியில் சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.