தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறுகையில் வடகிழக்கு பருவமழை கடந்த 20-ம் தேதியே தொடங்க வேண்டிய நிலையில், அண்மையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் புயல் வீசியதால் காற்றின் திசைமாறி பருவமழை தொடங்குதில் தாமதம் ஏற்பட்டது. 21-ம் தேதியுடன் தென்மேற்கு பருவமழையும் முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்கள், கேரளா, கர்நாடகாவில் வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளது. 

இலங்கை முதல் தென்மேற்கு வங்கக்கடல் பகுதி வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை நிலவுகிறது. தென் தமிழகத்தின் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் அதிகபட்சமாக சென்னை புழலில் 11 செ.மீ., கேளம்பாக்கத்தில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இதனிடையே வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.