Asianet News TamilAsianet News Tamil

பிளஸ்-2 தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத அரசு பள்ளி; தலைமை ஆசிரியரை மாற்ற கோரி மாணவர்கள் போராட்டம்...

noone pass in plus-2 exam government school Students struggle to change head master...
noone pass in plus-2 exam government school Students struggle to change head master...
Author
First Published Jun 5, 2018, 10:18 AM IST


கிருஷ்ணகிரி
 
பிளஸ்-2 தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறாத மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தலைமை ஆசிரியை இடமாற்றம் செய்யக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் அருகே பாரந்தூர் பக்கமுள்ள மாசிநாயக்கனப்பள்ளியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. 

கடந்த மார்ச் மாதம் நடந்த பிளஸ்-2 தேர்வை இந்தப் பள்ளி மாணவ, மாணவிகள் 29 பேர் எழுதினார்கள். இந்த நிலையில் கடந்த மாதம் வெளியான தேர்வு முடிவுகளில் மாசிநாயக்கனப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் ஒருவர் கூட தேர்ச்சி அடையவில்லை.

இது கல்வித்துறை அதிகாரிகள் வட்டாரத்திலும், மாணவ, மாணவிகள், பெற்றோரிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மாணவ, மாணவிகளுக்கு ஆசிரியர்கள் சரியான முறையில் பாடங்களை நடத்தாதே இதற்கு காரணமாம். அதனால்தான் அனைத்து மாணவ, மாணவிகளும் தோல்வியை தழுவியதாக பெற்றோர் தரப்பில் புகார் கூறப்பட்டது.

இந்த நிலையில் விடுமுறைக்கு பிறகு நேற்று இந்த பள்ளி திறக்கப்பட்டது. பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகள் வகுப்பறைக்கு செல்லாமல் பள்ளியின் வாசலிலேயே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இது குறித்து தகவல் அறிந்ததும் தேன்கனிக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளர் சங்கர், ஓசூர் தாசில்தார் பண்டரிநாதன் மற்றும் அதிகாரிகள் அங்கு சென்று மாணவ - மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, அங்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வர வேண்டும் என்று மாணவ, மாணவிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி அங்கு சென்றார். அவர் மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 

அப்போது மாணவ, மாணவிகள், "பள்ளியின் தலைமை ஆசிரியை ராஜலட்சுமியை இடமாற்றம் செய்ய வேண்டும், கூடுதலாக ஆசிரிய, ஆசிரியைகள் நியமிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர். 

"தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்" என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி உறுதி அளித்தார். 

இதையடுத்து மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு சென்றார்கள். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios