நாமக்கல்,

மின்மிகை மாநிலம் என்று காலரைத் தூக்கிவிட்டுத் திரியும் தமிழகத்தில், குடிநீர் பிரச்சினையால் நாவறண்டு திரியும் பொதுமக்கள் குடிநீர்ப் பிரச்சனையைத் தீர்க்க வேண்டுமென மனு அளித்துள்ளனர்.

குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கக்கோரி, காலிக்குடங்களுடன் பெண்கள் திரண்டு வந்ததால் நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் அருகே உள்ள கீரம்பூர் ஊராட்சிக்கு உட்பட்டது வேட்டுவம்பாளையம். இங்கு 100–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் போர்வெல் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த 20 நாள்களுக்கு மேலாக மின்மோட்டார் பழுதானதால் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த 30–க்கும் மேற்பட்ட பெண்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திரண்டு வந்தனர்.

அப்போது அவர்கள் குடிநீர் சீராக விநியோகம் செய்யப்படாததால் அருகில் உள்ள விவசாய கிணறுகளில் சென்று தண்ணீர் பிடித்து வருவதாகவும், இதனால் வேலைக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியவில்லை எனவும் குற்றம் சாட்டினர். மேலும் பள்ளி குழந்தைகளை உரிய நேரத்தில் பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியாமல் அவதி அடைந்து வருவதாகவும் கூறினர்.

பின்னர் அவர்கள், குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி ஆட்சியர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனுவை அளித்தனர்.

அந்த மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர், அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

குடிநீர் பிரச்சினையை தீர்க்கக்கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் திரண்டு வந்ததால் சிறிது நேரம் ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்புடன் இருந்தது.