கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். 

கிருஷ்ணகிரி

கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும் என்று இந்து முன்னணியினர் கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.

இந்து முன்னணியினர் நேற்று கிருஷ்ணகிரி ஆட்சியர் கதிரவனை சந்தித்து கோரிக்கை மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில், "தமிழ்நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி சிறப்பாகவும், உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. 

மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் கடந்த பல வருடங்களாக அமைதியாக விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த வருடம் விநாயகர் சதுர்த்திக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இது இந்துக்களுக்கு மத வழிபாட்டு உரிமையை மறுப்பதை போலாகும். 

அதுமட்டுமின்றி விநாயகர் சதுர்த்தி கொண்டாட ஆட்சியர், உதவி ஆட்சியரிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று காவல் துறையினர் கூறுகின்றனர். எனவே, கட்டுப்பாடுகளைத் தளர்த்தி விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட வழிவகை செய்ய வேண்டும்" என்று அதில் கேட்டுக் கொண்டனர்.

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கதிரவன் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.