அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை; சின்னமும் இல்லை என்றும், அதிமுகவில் வெவ்வேறு அணிகளால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் தா. பாண்டியன் வேதனை தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. அக்கட்சியில் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட சசிகலா, ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து இருந்து முதலமைச்சர் பதவியை பறித்து, தானே முதலமைச்சராக வேண்டும் என விரும்பினார்.

இதையடுத்து அவர் அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் கடுப்பான ஓபிஎஸ், ஜெயலலிதா சமாதிக்கு சென்று தியானம் செய்து தனது போராட்டத்தைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அதிமுக சசிகலா அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிரிந்தது.

இந்நிலையில் சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து இரு தரப்பு அணிகளும் இணைய வேண்டும் என்று ஓபிஎஸ் கோரிக்கை விடுத்தார். ஜெயலலிதா  மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும், சசிகலா குடும்பத்தினரை கட்சியை நீக்க வேண்டும் என இரு நிபந்தனைகளை விதித்தார்.

கட்சி சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமினில் வெளியே வந்த அவர், கட்சி பணியில் ஈடுபடப் போவதாக அறிவித்தார். நேற்று முன்தினம், டிடிவி தினகரன் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் பட்டியலை வெளியிட்டார். டிடிவி தினகரன் அளித்த பதவியை ஏற்க மாட்டோம் என்று எம்.எல்.ஏ.க்கள் சிலர் கூறியும், இன்று அந்த பதவியினை சிலர் ஏற்றும் உள்ளனர்.

இந்த நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக்குழு உறுப்பினர், தா. பாண்டியன், செய்தியாளர்களிடையே பேசினார். அப்போது, அதிமுக என்ற பெயரில் கட்சியும் இல்லை; சின்னமும் இல்லை என்றார். அதிமுகவில் வெவ்வேறு அணிகளால் தமிழகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதாகவும் தா. பாண்டியன் வேதனை தெரிவித்தார்.