திருவள்ளூர்

சிறுமி ஆஷிஃபா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எவ்விதமான விசாரணையும் இல்லாமல் உடனே தூக்கில் போட்டாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள் என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் ஆவேசத்துடன் பேசினார்.

அகில இந்திய எஸ்.சி., எஸ்.டி. இரயில்வே பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் அம்பேத்கரின் 127-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திருவள்ளூர் இரயில் நிலையம் முன்பு நேற்று நடைப்பெற்றது. 

இந்தக் கூட்டத்திற்கு தொழிற்சங்க தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். இதில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று பேசினார். 

அவர், "காவிரி விவகாரத்தில் மத்தியில் பாஜக அரசும், கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசும் கூட்டு சேர்ந்து தமிழர்களை வஞ்சித்து வருகின்றன. எனவே பாஜக, காங்கிரஸ் கட்சிகளின் கூட்டு  சதியே காவிரி மேலாண்மை வாரியம் அமையாமல் இருப்பதற்கு காரணம் ஆகும்.

வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் கொண்டு வருவது தாழ்த்தப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும் என்பதால் அதை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

சிறுமி ஆஷிஃபா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்களை எவ்விதமான விசாரணையும் இல்லாமல் உடனே தூக்கில் போட்டாலும் யாரும் எதிர்க்க மாட்டார்கள். 

அருப்புக்கோட்டையில் தனியார் கல்லூரி பேராசிரியை மாணவிகளிடையே பேசிய விவகாரம் தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும்.  அதோடு, அந்த விவகாரத்தில் தொடர்புடைய அதிகாரிகள் அல்லது அரசியல்வாதிகள் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று அவர் பேசினார்.