no more wins shop

பழைய கடைய மூடு…புதுக் கடையை திறக்காதே….டாஸ்மாக்கிற்கு எதிராக பொங்கி எழும் பொது மக்கள்…..

தேசிய நெஞ்சாலைகள் மற்றும் மாநில சாலைகளில் 500 மீட்டருக்குள் இருக்கும் மதுக்கடைகளை அகற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து தமிழகத்தில் நெடுஞ்சாலைகளில் உள்ள 3400 மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் பெண்களும், பொது மக்களும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதே நேரத்தில் குடிமகன்கள் மது கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.பல மதுக்கடைகளில், நீண்ட வரிசையில் நின்று குடிமகன்கள் சரக்கு வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் நெடுஞ்சாலைகளில் உள்ள கடைகள் மட்டுமல்லாமல் குடியிருப்பு பகுதிகளில் உள்ள கடைகளை மூட வலியுறுத்தி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

சேலம் மாவட்டம் பெரமலூர் பகுதியில் புதிய மதுக்கடைகளை திறக்கக்கூடாது என மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக போலீசார் தங்களது வாகனத்தில் வந்தனர். அப்போது மாணவர்களும் ,இளைஞர்களும் அந்த வாகனத்தின் அடியில் சென்று படுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் திருவெப்பூர் பகுதியில் புதிய மதுக்கடைகளை அரசு அதிகாரிகள் திறக்க முயன்றனர். அவர்களை முற்றுகையிட்ட பொது மக்கள் அதிகாரிகளை விரட்டியடித்தனர்.

வேலூர் மாவட்டம், ஆம்பூரில் மூடப்பட்ட கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க வந்த வருவாய்த்துறை அதிகாரிகளை பெண்கள் முற்றுகையிட்டு சிறைபிடித்தனர். இதனையடுத்து அதிகாரிகள் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

திருப்பூர் அருகே ஆத்துப்பாலம் பகுதியில் குடியிருப்புப் பகுதியில் உள்ள கடையை அகற்றக்கோரி ஏராளமான பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தர்மபுரி மாவட்டம் தொக்கம்பட்டியில் போலீசார் உதவியுடன் மதுக்கடையை அதிகாரிகள் திறக்க முயன்றனர். ஆனால் அங்கு திரண்ட பெண்கள் போலீசாருடன் தள்ளுமுள்ளு நடத்தி கடையை திறக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு, ஈரோடு மாவட்டம் எல்லப்பாளையம், விருதுநகர் மாவட்டம் சத்திரப்பட்டி போன்ற தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் புதிய மதுபானக்கடைகளை திறக்க விடாமல் பொது மக்கள் தடுத்து நிறுத்தினர்.

தமிழகம் முழுவதும் மதுபானக்கடைகளுக்கு எதிராக பொது மக்களிடையே ஏற்படுள்ள விழிப்புணர்வு காரணமாக வருவாய் துறை அதிகாரிகள் மூடப்பட்ட மதுக்கடைகளுக்கு பதிலாக புதிய கடைகளை திறக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர்.