முதல்வர் ஜெயலலிதா காலமான பிறகு, அப்பல்லோ மருத்துவமனை வெறிச்சோடி கிடக்கிறது.

கடந்த செப்டம்பர் 22ம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக முதல்வர் ஜெயலலிதா, சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் உள்ளள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜெயலலிதா மருத்துவமனையில் அனமதிக்கப்பட்ட செய்தி அறிந்தததும், அன்று இரவு முதல் தொண்டர்கள் மருத்துவமனையில் குவியத் தொடங்கினர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் செப்டம்பர் 22ம் தேதி முதல் டிசம்பர் 5ம் தேதி அதிகாலை என மொத்தம் 75 நாள்கள் மருத்துவமனையில் இருந்தார். இதன் காரணமாக, அதிமுக தொண்டர்கள் தினமும் மருத்துவமனைக்கு வந்த வண்ணம் இருந்தனர். இதையொட்டி, மருத்துவமனைக்கு செல்லும் சாலைகள் அனைத்திலும் தடுப்பு போடப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

அதிமுகவை சேர்ந்த பெண் தொண்டர்கள் சுமார் 2 மாதங்களாக மருத்துவமனை முன்பாகவே அமர்ந்து இருந்தனர். அவ்வப்போது சிறப்பு பூஜை, யாகங்கள், பல மதப் பிரார்த்தனைகள் உள்ளிட்டவை நடைபெற்றன. முதல்வர் அனுமதிக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மருத்துவமனையின் முன்பு செய்திகள் சேகரிப்பதற்காக குழுமி இருந்தனர்.

முதல்வரின் நலன் குறித்து விசாரிப்பதற்கு தேசிய அரசியல் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பிற மாநில அரசியல் தலைவர்கள், பிற மாநில முதல்வர்கள், கவர்னர்கள், தமிழக அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள், திரையுலகத்தினர் என நாள்தோறும் மருத்துவமனைக்கு ஏராளமானோர் வந்தனர்.

இதனால் மருத்துவமனை பகுதி எப்போதும் பரபரப்பாகவும், மக்கள் கூட்டத்துடனும் காணப்படும். ஒரு சில தொண்டர்கள் முதல்வர் வீடு திரும்பும் வரை தாங்களும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பாமல் அதே இடத்தில் இருந்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா காலமானதை அறிந்ததும், மாநிலம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிந்தனர். கிரீம்ஸ் ரோட்டில் திரண்டிருந்த தொண்டர்கள் அதிர்ச்சியடைந்து மருத்துவமனை இருந்த பகுதிக்குள் அத்துமீறி நுழைய முற்பட்டனர்.

அவர்களை அங்கு பணியில் இருந்த கமாண்டோ வீரர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோர் மருத்துவமனை முன் பகுதியில் இருந்து பொதுமக்கள், தொண்டர்களை அப்புறப்படுத்தத் தொடங்கினர். 

டிசம்பர் 5ம் நள்ளிரவு முதல்வர் இறந்த செய்தி வெளியாகும் போது மருத்துவமனையின் முன்பு பத்திரிகையாளர்கள், காவல்துறையினர் மட்டுமே காணப்பட்டனர். அவரது உடல் நேற்று காலை மருத்துவமனையில் இருந்து போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர், அங்கு பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார், பத்திரிகையாளர்கள் அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் காரணமாக 75 நாள்களாக மக்களால் நிறைந்து கிடந்த அப்பல்லோ மருத்துவமனை பகுதி நேற்று காலை 4 மணியளவில் வெறிச்சோடியது.

நேற்று அதிகாலை முதல் இதுவரை ஆள் அரவமற்று கிரீம்ஸ் ரோடு காணப்படுகிறது. 75 நாட்களாக எவ்வித பணமும் செலுத்தாமல், இலவசமாகவே அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களில் விளம்பரம் செய்த அப்பல்லோ மருத்துவமனை இன்று வெறிச்சோடி காணப்படுகிறது.