no collector in Ariyalur Farmers protest demanding appointment of new collector

அரியலூர்

அரியலூரில் ஆட்சியர் இல்லாததால் அரசுப் பணிகள் தொய்வு அடைந்துள்ளதால் உடனடியாக புதிய ஆட்சியரை நியமனம் செய்ய வேண்டும் என்று தமிழக ஏரி, ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்

அரியலூரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கம் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் தலைமை வகித்தார்.

இந்த ஆர்ப்பாட்டத்தின் போது, “அரியலூர் மாவட்டத்தில் புதிதாக ஆட்சியர் நியமிக்கப்படாததால் 68 நாள்களாக அரசுப் பணி நடைபெறுவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்திற்கு உடனடியாக புதிய ஆட்சியரை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

விவசாயிகளுக்கு மின் இணைப்புகளை கால தாமதமின்றி கொடுக்க வேண்டும்.

ஏரிகளுக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால்களை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பயிர் காப்பீட்டு தொகை, வறட்சி நிவாரணம் ஆகியவற்றை உடனடியாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.

விவசாயக்கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்.

சுண்ணாம்புக்கல் சுரங்கத்தில் சேரும் மழைநீரை விவசாயத்திற்கு பயன்படுத்த வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாய சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.