No chance to merge ops and eps group...Nanjil sampath speech
அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு இனி வாய்ப்பே இல்லை என அம்மா அணியின் நாஞ்சில் சம்பத் தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக அம்மா அணி, புரட்சித் தலைவர் அம்மா அணி என பிரிந்து செயல்பட்டு வருகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். இரட்டை இலை சின்னத்தைப் பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டி.டி.வி.தினகரன், கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து பிரிந்து போன இரண்டு அணிகளும் இணைய வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதற்காக பேச்சு வார்த்தை நடத்த குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இரு அணி தலைவர்களும் தொடர்ந்து மாறுபட்ட கருத்துக்களை பேசி வந்ததால் இணைப்பு பிரச்சனை கிடப்பில் போடப்பட்டது.
இந்நிலையில் டி.டி.வி.தினகரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நாஞ்சில் சம்பத் தலைமையில் தூத்துக்குடியில் கண்டனப் பொதக் கூட்டம் நடைபெற்றது.
அதில் பங்கேற்றுப் பேசிய நாஞ்சில் சம்பத், டி.டி.வி.தினகரன் மீது பொய்யான வழக்கு புனையப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஓபிஎஸ் தரப்பினரின் சதி காரணமாகத்தான் டி.டி.வி.தினகரன் வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறினார்.
ஓபிஎஸ்ஐ கடுமையாக பேசிய நாஞ்சில் சம்பத், சசிகலா, தினகரன் இல்லாமல் ஓபிஎஸ் அதிமுகவை நடத்திக் செல்ல முடியுமா? என கேள்வி எழுப்பினார். அப்படி நடத்தவிட்டுவிடுவோமா? எனவும் சவால் விட்டார்.
ஓபிஎஸ் அணியுடன் இனி பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பே இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த நாஞ்சில் சம்பத், இரு அணிகளும் இணையக் கூடாது எனவும் குறிப்பிட்டார்.
