தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது; ரூ.4000 கோடி எங்கே? நிர்மலா சீதாராமன் சரமாரி கேள்வி!

தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்

Nirmala sitharaman has said tamilnadu rains wont be announced as national disaster smp

தமிழ்நாட்டில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டன.  இந்த இயற்கைப் பேரிடரால் ஏறத்தாழ ஒரு கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர்.

மிக்ஜாம் புயலா ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியில் தமிழக அரசு முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருந்த நிலையில், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இதனால், ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் அம்மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் ஏற்பட்ட கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், தமிழக கனமழை, வெள்ளத்தை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க இயலாது. தேசிய பேரிடராக அறிவிக்கும் நடைமுறை தற்போது இல்லை.  தேசிய பேரிடராக இதுவரை மத்திய அரசு அறிவித்ததே இல்லை. இனி அறிவிக்கவும் முடியாது.” என தெரிவித்தார்.

உத்தராகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட்டபோதும் கூட தேசிய பேரிடராக அறிவிக்கவில்லை என சுட்டிக்காட்டிய அவர், “தமிழக மழை வெள்ளத்தை, மாநில பேரிடர் என மாநில அரசு அறிவிக்க நினைத்தால் அதற்கான நடைமுறைகளுக்கு மத்திய அரசு உதவும். அதற்கான வழிகாட்டுதல்களை மத்திய அரசு அதிகாரிகள் செய்வர்.” என்றார்.

மத்திய அரசின் அனைத்து துறைகளும் இணைந்து நடவடிக்கை எடுத்ததாகவும், உள்துறை அமைச்சகத்தில் இருந்த 2 கட்டுப்பாட்டு அறைகளும் 24 மணி நேரமும் வெள்ள பாதிப்பை கண்காணித்ததாகவும் நிர்மலா சீதாராமன் தகவல் தெரிவித்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தமிழக அமைச்சர்கள் எப்போது சென்றனர் என கேள்வி எழுப்பிய அவர், “தென் மாவட்டங்களில் வெள்ளம் வடிவதற்கு முன்பாகவே, பேரிடர் மீட்புக் குழுவினர் மீட்புப் பணிகளில் இறங்கினர் என தெரிவித்த அவர், பேரிடர் மீட்புக் குழுவினர் பணியில் இறங்குவதற்கு முன்பு, தமிழக அரசு சார்பில் ஒருவர் கூட அங்கு இல்லை.” என குற்றம் சாட்டினார்.

சென்னை வானிலை மையம் உரிய முன்னெச்சரிக்கையை வழங்கியது: நிர்மலா சீதாராமன்!

மேலும், “சென்னையில் புயல் பாதிப்புக்கு முன்னர், ரூ.4 ஆயிரம் கோடி செலவு செய்ததாக கூறினர். ஆனால், சென்னை மழைக்கு பிறகு இது மாறியது. 92 சதவீத பணிகள் முடித்ததாக கூறியவர்கள், பிறகு 42 சதவீத பணிகள் தான் முடிந்தது என்றனர். 42 சதவீத பணிகள் செய்ததாக கூறுவதும் நிஜம் தானா என்ற கேள்வி எழுகிறது? சென்னையில் வெள்ளத்தடுப்பு நடவடிக்கைக்காக செலவு செய்ததாக கூறிய 4 ஆயிரம் கோடி ரூபாய் என்ன ஆனது?” என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், தென் மாவட்ட மக்கள் வெள்ளத்தில் தத்தளித்த போது தமிழக முதல்வர் எங்கு இருந்தார். மழை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்டிருந்த போது முதல்வருக்கு இந்தியா கூட்டணியுடன் ஆலோசனைதான் முக்கியமாகிவிட்டது. இந்தியா கூட்டணி தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க டெல்லி வந்த முதல்வர் ஸ்டாலின் போகிற போக்கில் பிரதமரை சந்தித்து பேசினார். இரவு நேரம் என்றாலும் பிரதமர் தமிழக முதல்வரை சந்திக்க நேரம் ஒதுக்கினார். என் மண் என் மக்கள்தான் முக்கியம் என்று முதலமைச்சர் சென்றிருக்க வேண்டாமா? 4 நாட்களுக்கு பிறகே தென் மாவட்டங்களுக்கு சென்று மக்களை பார்த்துள்ளார்.” என தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios