கள்ளச்சாராய மரணங்கள் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கள்ளச்சாராயம் என்ற பெயரில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து 21 பேர் மரணம் அடைந்துவிட்ட நிலையில், தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

NHRC issues notice to TN govt over hooch tragedy

தமிழகத்தின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து பலர் உயிரிழந்துள்ளது தொடர்பாக தேசிய மனித உரிமைகள் ஆணையம் (என்எச்ஆர்சி) செவ்வாய்கிழமை தானாக முன்வந்து தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி விளக்கம் கோரியுள்ளது.

தேசிய மனித உரிமையகள் ஆணையம் அனுப்பி இருக்கும் நோட்டீசில், “தமிழ்நாட்டின் விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் 2023 மே 12 முதல் கள்ளச்சாராயம் அருந்தி பலர் இறந்த விவகாரத்தை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (NHRC) தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறது" எனக் கூறப்பட்டுள்ளது.

"ஊடகச் செய்திகளின் உள்ளடக்கம் உண்மையாக இருந்தால், மக்களின் வாழ்வுரிமையை மீறுவதாக ஆணையம் கருதுகிறது. மாநில அரசு சட்டவிரோத / கள்ள மதுபானம் விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்யத் தவறிவிட்டது என வெளிப்படையாகத் தெரிகிறது. அது குறித்து விளக்கம் பெற நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என ஆணையம் கூறியுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக 4 வாரங்களுக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழ்நாடு தலைமைச் செயலாளர் மற்றும் காவல்துறை தலைமை இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளது.

கண்டுகொள்ளப்படாத கள்ளச்சாராய மரணங்கள்! தமிழகத்தில் தொடரும் அவலம்!

NHRC issues notice to TN govt over hooch tragedy

அதில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் நிலை, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை மற்றும் இழப்பீடு வழங்கப்பட்ட விவரம், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் சோகத்திற்கு காரணமான தவறு செய்த அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை பற்றியும் அறிய விரும்புகிறது ஆணையம் தெரிவித்துள்ளது.

“அராக் (Arrack) என்ற சட்டவிரோத மதுபானம், மெத்தனால், ரசாயனங்கள் மற்றும் தண்ணீர் கலந்த காக்டெய்ல் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்களால் அதிகம் உட்கொள்ளப்படுகிறது எனவும் ஊடகச் செய்திகளில் இருந்து தெரியவருகிறது” எனவும் மனித உரிமைகள் ஆணையம் நோட்டீசில் சொல்லி இருக்கிறது.

இதனிடையே, விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் அருந்தி பலியானவர்கள் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. மேலும், கள்ளச்சாராயம் என்ற பெயரில் ஆலைகளில் பயன்படுத்தப்படும் மெத்தனால் கலந்த பானத்தை அவர்கள் உட்கொண்டனர் என்றும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசு அமரன், முத்து, ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி ஆகிய கள்ளச்சாராய வியாபாரிகளை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டு, இதில் அரசியல் கட்சியினருக்குத் தொடர்பு உள்ளதா விசாரணை நடத்தப்படுகிறது.

கள்ளச்சாராயம் அற்ற மாநிலமாக தமிழ்நாட்டை மாற்ற வேண்டும் - அரசுக்கு மநீம தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தல்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios