Asianet News TamilAsianet News Tamil

அடுத்த கன மழை காத்திருக்கு... வங்கக் கடலில் அடுத்தடுத்து உருவாகும் 2 காற்றழுத்தத் தாழ்வு நிலைகள்...!

next consecutive two depressions on coming days expect heavy rain in coastal tamil nadu and pondichery
next consecutive two depressions on coming days expect heavy rain in coastal tamil nadu and pondichery
Author
First Published Nov 18, 2017, 2:40 PM IST


அடுத்து வரும் நாட்களில்  வங்கக் கடலில் புதிதாக 2 குறைந்த காற்றழுத்தத் தாழ்வுநிலைகள் உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.  

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இந்த மாதத் துவக்கத்தில் கன மழை பெய்தது. வடகிழக்குப் பருவ மழை துவங்கியதுமே நல்ல மழைப் பொழிவு பல இடங்களில் இருந்தது.  இதுவரை வங்கக்கடலில் 2 காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவானது. இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகத்தில் 10 நாட்களாக மழை பெய்தது.  பின் 3 நாள் இடைவெளியில்,  மீண்டும் வங்கக் கடலில் ஒரு புதிய காற்றழுத்தத் தாழ்வுநிலை உருவானது. ஆனால் அதனால் பெரிய மழைப்பொழிவு தமிழகத்தில் இருக்கவில்லை. சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் பெரும் மழை இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்த காற்றழுத்தத் தாழ்வுநிலை வடதிசை நோக்கி நகர்ந்து ஒடிசா பக்கம் சென்றது .

இந்நிலையில், வங்கக் கடல் பகுதியில் வரும் நாட்களில் மேலும் இரண்டு காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் உருவாக உள்ளதாக  இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  வரும் 21ஆம் தேதி வடக்கு அந்தமான் அருகிலும், வரும் 27ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியிலும் அடுத்தடுத்து இரண்டு  குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலைகள் புதிதாக உருவாகும் என அது தெரிவித்துள்ளது. 

ஏற்கெனவே உருவான இரு காற்றழுத்தத் தாழ்வு நிலைகளால் தமிழகத்தில் எதிர்பார்த்த மழைப்பொழிவு இல்லை. வழக்கமாகப் பெய்யும் வடகிழக்குப் பருவமழையின் சராசரி அளவைவிட குறைந்த அளவே பெய்துள்ளதாகக் கூறப்படும் நிலையில், அடுத்து வரும் மழையாவது நல்ல மழைப் பொழிவைத் தருமா என்று எதிர்பார்த்துள்ளனர். ஆனால்,  அந்தமான் அருகே உருவாகும் காற்றழுத்தத் தாழ்வு நிலை, பெரும்பாலும் தமிழகம் நோக்கி வர வாய்ப்பில்லை என்றும்,  ஆனால் காற்றின் சுழற்சியைப் பொறுத்து தென் மாவட்டங்களுக்கு மழை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. 

இருப்பினும், இரண்டாவதாக உருவாகும் தென்கிழக்கு வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்தத் தாழ்வுநிலை, தமிழக கடலோர மாவட்டங்களில்  கனமழை பெய்ய வாய்ப்பாக அமையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த மாதத் துவக்கத்தில் பெய்த மழையினால் பல இடங்களில் தண்ணீர் தேங்கி, மக்களுக்கு சிரமத்தைக் கொடுத்தாலும், பல ஏரிகள் குளங்கள் நிரம்பவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

தண்ணீரைத் தேக்கி வைக்க போதுமான நடவடிக்கை எடுக்கப்படாததால் மழை நீர் வீணாகப் போனதாக புகார் கூறப்படுகிறது. எனவே இம்முறையாவது தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரிக் கரைகளைப் பலப்படுத்தி வைக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள். 

Follow Us:
Download App:
  • android
  • ios