திருத்தணியில் அறுவை சிகிச்சை மூலமாகப் பிறந்த குழந்தையின் எலும்பு முறிவுக்கு மருத்துவர்களின் கவனக் குறைவே காரணம் என்று குழந்தையின் தந்தை காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

திருத்தணியை அடுத்த பெருகுமி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவரது மனைவி பிரியா, கடந்த 19-ஆம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காகச் சேர்க்கப்பட்டார்.

20-ஆம் தேதி பிரியாவுக்கு அறுவைச் சிகிச்சையில் பெண் குழந்தை பிறந்தது.

இந்த நிலையில், குழந்தையின் இடது கால் தொடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகவும், மேல்சிகிச்சைக்குச் சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லுமாறும் மருத்துவர்கள் அறிவுறுத்தினர்.

குழந்தையின் பெற்றோர், எழும்பூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, அங்குள்ள மருத்துவர்கள், பிரசவம் பார்த்தது திருத்தணியில் என்பதால் அங்கேயே சிகிச்சைக்கு எடுத்துக் செல்லுங்கள் என்று கூறியுள்ளனர்.

இதையடுத்து, குழந்தை திருத்தணி அரசு மருத்துவமனையில் மீண்டும் அனுமதிக்கப்பட்டது.

இந்த செயலால் சந்தேகம் அடைந்த குழந்தையின் தந்தை, மருத்துவர்களின் கவனக்குறைவால் தான் குழந்தைக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்பதை உணர்ந்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார். மேலும், திருத்தணி காவல்நிலையத்தில் புகாரும் அளித்துள்ளார்.

இதுகுறித்து, காவல்துறையினர் விசாரனை நடத்தி வருகின்றனர்.