தனியார் வங்கியில் பணம் செலுத்தும்போது புத்தம் புதிய 2000 கள்ளநோட்டை மாற்ற முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூர் சாந்தோம் நெடுஞ்சாலையில் தனியார் வங்கி உள்ளது. இங்கு ஒரு ஆசாமி, தனது வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினார். அந்த பணத்தை பெற்ற கேஷியர், சோதனை செய்தார். அப்போது, புத்தம் புதிய 2000 கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து வங்கி மேலாளருக்கு தகவ்ல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வ்ங்கி ஊழியர்கள், அந்த ஆசாமியிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார்.

தகவலறிந்து மயிலாப்பூர் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று அந்த ஆசாமியை பிடித்தனர். பின்னர், காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர்.

அதில், புழல் நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் அல்வின் கிறிஸ்டோபர் (40). மயிலாப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறார். நிறுவனத்தில் வசூலாகும் பணத்தை மேற்கண்ட வங்கியில் செலுத்துவது வழக்கம்.

இந்நிலையில், வசூலான ரூ.32 ஆயிரத்தை அந்த வங்கியில் கட்டினார். அந்த பணத்தில் ரூ.13 இரண்டாயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் இருப்பது தெரிந்தது.

அவைகள் ஒரே வரிசை எண்ணில் புத்தம் புதிய நோட்டுகளாக இருந்தது தெரிந்தது. இதை தொடர்ந்து, அல்வின் கிறிஸ்டோபரிடம், போலீசார் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

கடந்த மாதம் புதிய ரூ.2 ஆயிரம் ரூபாய் கள்ளநோட்டுகள் கட்டு, கட்டாக கப்பல் மூலம் சென்னை துறைமுகத்திற்கு வந்ததாக மத்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

அதன்படி ஒரு வாரம் துறைமுகத்தில் உள்ள அனைத்து கன்டெய்னர்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது. இதில் கள்ள நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்  இல்லை.

ஆனால் தற்போது வங்கியில் புத்தம் புதிய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு பிடிப்பட்டிருப்பது போலீசாருக்கு பல்வேறு சந்தேகத்தை எழுப்பி உள்ளது.

இந்த கள்ள நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.