நெல்லை அருகே 2 அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதி கோர விபத்து... 6 பேர் உயிரிழப்பு!
நெல்லை அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மற்றும் வேன் மோதிய விபத்தில் 6 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 18 படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை அருகே இரண்டு அரசுப் பேருந்துகள் மற்றும் வேன் மோதிய விபத்தில் 6 பேர் இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் 18 படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேகர் என்பவர் தனது குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருடன் ஒரு வேனில் திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். அதிகாலை நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வந்துக் கொண்டிருந்தது. அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் ஓட்டுநர் வேனை சாலையில் ஓரமாக நிறுத்தியுள்ளார்.
பின்னால் தொடர்ந்து வந்த அரசு பேருந்தும் வேன் நின்றதை தொடர்ந்து பேருந்து ஓட்டுனரும் அவசரமாக நிறுத்தியுள்ளார். அப்போது பேருந்து சாலையின் தடுப்புச் சுவரில் மோதி நின்றது. பின்னர் வேன் ஓட்டுனர், பேருந்து ஓட்டுனருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இரு தரப்பினரும் பேசி சமாதானமாகினர்.
இதனைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுனர் பேருந்தை பின்பக்கமாக எடுத்த போது மதுரையில் இருந்து நெல்லை நோக்கி வந்த மற்றொரு அரசு பேருந்து எதிர்பாராத விதமாக பின்னோக்கி வந்த அரசு பேருந்து மீது மோதியது. அந்த பேருந்து முன்னால் நின்ற வேன் மீதும் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் படுகாயமடைந்த 18 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் சுமார் ஒருமணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.