தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், மத்திய அரசுக்கு  கருத்து தெரிவித்துள்ளதை அடுத்து இன்று மாலை அல்லது நாளை இது குறித்த முடிவு வெளியாகலாம் என தெரிகிறது.

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து விலக்களிப்பது குறித்து தமிழக அரசு அவசர சட்டம் இயற்றினால் ஓராண்டுக்கு விலக்களிக்கப்படும் என்றும், நிரந்தர விலக்கு என்பது கிடையாது என்றும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியிருந்தார். 

இதையடுத்து, தமிழக அரசு அவசர சட்ட முன் வடிவை மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. தமிழக அரசின் அவசர சட்ட முன்வரைவு மற்றும் கூடுதல் ஆவணங்களை சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டு துறை மற்றும் சட்ட அமைச்சத்திற்கும் அனுப்பி
வைக்கப்பட உள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது.

இந்த 3 அமைச்சகங்களும் அவசர சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்த பிறகு, அவசர சட்ட முன்வரைவு குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்படும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்தது.

இந்த நிலையில், தமிழகத்துக்கு நீட் விலக்கு சட்ட முன் வடிவு தொடர்பாக தலைமை வழக்கறிஞரிடம், இன்று மத்திய அரசு கருத்து கேட்டிருந்தது. 

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு அளிக்கலாம் என்று தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், மத்திய உள்துறை மற்றும் சுகாதார துறை அமைச்சகத்துக்கு தனது கருத்தை அனுப்பியுள்ளார். 

தமிழகத்துக்கு நீட் தேர்வில் இருந்து ஓராண்டுக்கு விலக்கு கிடைப்பது குறித்து இன்று மாலை அல்லது நாளை காலையில் முடிவு வெளியாகலாம் என தெரிகிறது.