திருப்பூர்,

முதல்வரின் உடல்நலக் குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளை வாங்க கடைகளை நோக்கி படையெடுத்தனர்.

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையொட்டி நேற்று நள்ளிரவு முதல் தமிழக மக்களிடையே பதற்றம் ஏற்பட்டது.

இதனால் திருப்பூர் மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் முக்கிய இடங்களில் காவலாளர்கள் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

மேலும் விடுப்பில் இருந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவலாளர்கள் பணிக்கு திரும்ப அழைக்கப்பட்டு உள்ளனர்.

சென்னையில் பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டதாக வாட்ஸ்–அப் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் பரவியது. இதனால் திருப்பூரில் பெட்ரோல் பங்குகள் அடைக்கப்பட்டன.

தகவல் அறிந்த வாகன ஓட்டிகள் அவசர அவசரமாக பெட்ரோல் பங்குகளுக்குச் சென்று வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் போட்டனர். நள்ளிரவில் பொதுமக்கள் அதிக அளவில் அத்தியாசிய பொருட்களை வாங்க திரண்டனர். இதனால் மாநகரில் பரபரப்பு ஏற்பட்டது.