வேலூர்

நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும் என்று தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கம் தங்களது கிளை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் மற்றும் கலைஞர்கள் சங்கத்தின் மூன்றாவது  கிளை மாநாடு வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. 

இந்த மாநாட்டுக்கு சங்கக் கிளைத் தலைவர் தா.வெங்கடேசன் தலைமை வகித்தார். துணைச் செயலாளர் ஜெ.ஜெயந்தி வரவேற்றார். மாவட்டத் தலைவர் முல்லைவாசன், மாவட்டச் செயலாளர் எஸ்.சுரேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். 

அதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி சி.சரவணன் கவிதை தொகுப்பு நூலை வெளியிட, அரசு மேல்நிலைப் பள்ளி உதவித் தலைமை ஆசிரியர் எஸ்.அன்பழகன் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். 

இதில், தமிழ்நாடு விவசாய சங்க மாவட்டத் தலைவர் எல்.சி.மணி, எழுத்தாளர் சங்கப் பொருளாளர் த.ரஜினி, துணைச் செயலாளர் ஆர்.புவனேஸ்வரி, செயலாளர் கோ.ரங்கநாயகி உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர்.

இதனையடுத்து இராணிப்பேட்டை கிளை புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், கிளைத் தலைவராக ஜி.கோபால்ராஜ், செயலாளராக ஏ.ஸ்டாலின், பொருளாளராக எச்.இந்திரகுமார், துணைத் தலைவர்களாக தா.வெங்கடேசன், த.ரஜினி உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில், "நீதிமன்றங்களில் தமிழை வழக்காடு மொழியாக்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் உள்ள அரசு நூலகங்களை விரிவாக்கம் செய்து, புதிய நூல்களை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இராணிப்பேட்டையில் உள்ள எம்.எப்.சாலைக்கு தியாகி கல்யாணராமன் பெயரை சூட்ட வேண்டும்" உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.