விழுப்புரம்,
விழுப்புரம் அருகே நடுரோட்டில் அரசு பேருந்தின் சக்கரங்கள் கழன்று ஓடியதில் 25 பேர் பலத்த காயம் அடைந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பேருந்துநிலையத்தில் இருந்து நேற்று காலை 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று கொட்டையூர் கிராமத்துக்கு புறப்பட்டுச் சென்றது.
அந்தப் பேருந்தை கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த சடகோபன் ஓட்டினார். நடத்துநராக காண்டியப்பன் என்பவர் பணியில் இருந்தார்.
அந்த பேருந்து காலை 10.50 மணியளவில் சென்னை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியமாம்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பேருந்தின் அச்சு திடீரென முறிந்தது.
இதனால் அதன் பின் சக்கரங்கள் கழன்று சாலையில் ஓடின. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து சாலையோரம் இருந்த மைல் கல் மீது மோதி நின்றது.
இதனால் பேருந்தில் இருந்த பயணிகள் அலறினர். இதைக் கேட்ட அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து, விபத்தில் பலத்த காயமடைந்த பிரிதிவிமங்கலத்தைச் சேர்ந்த ராஜவேல் மனைவி அமுதா (31), புத்தந்தூரை சேர்ந்த கண்ணன் மனைவி இலட்சுமி (25), பெருமாள் மனைவி கோவிந்தம்மாள் (40), கண்ணன் மகன் சபரி (5), கனகராஜ் மகன் சிவமணி உள்பட 25 பேரை மீட்டு 3 ஆம்புலன்ஸ்கள் மூலம் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், இந்த விபத்து பற்றி தியாகதுருகம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு காவலாளர்கள் வந்தனர்.
பின்னர், விபத்துக்குள்ளான அரசு பேருந்தை மீட்பு வாகனம் மூலம் அப்புறப்படுத்தினர்.
தமிழகம் முழுவதும் ஓடும் அரசு பேருந்துகளில் எஃப்சி முடிந்த, பிரேக் சரிவர இயங்காத, எஞ்சின் கோளாறு போன்ற பல்வேறு பழுதுகளுடன் பல அரசு பேருந்துகள் ஓடுகின்றன என்பது கூடுதல் தகவல்.
