national disaster rescue team ready in chennai

வடகிழக்குப் பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்துள்ளது. கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சென்னையின் பல்வேறு பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டைப் போல வெள்ள பாதிப்பு ஏற்படாத வண்ணம் இந்தமுறை பல்வேறு நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இலவச உதவி எண்கள் அறிவிப்பு, தேங்கும் நீரை வெளியேற்ற மின்மோட்டார்கள் என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்நிலையில், கனமழை பாதிப்பு உள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளில் ஈடுபட தயார் நிலையில் உள்ளதாக தேசிய பேரிடர் மீட்புப்படையினர் தெரிவித்துள்ளனர்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் சென்னை மற்றும் அரக்கோணம் முகாம்களிலிருந்து குழுவுக்கு 45 வீரர்கள் என்ற வீதம் 9 குழுக்கள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு உபகரணங்களும் தேவையான அளவு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனமழையால் பாதிக்கப்படும் மக்கள் பதற்றப்படாமல் இலவச உதவி எண்களை தொடர்பு கொண்டால் மீட்புப் பணி உள்ளிட்ட உதவிகள் கிடைக்கும்.