கோயம்புத்தூர்

தேசிய விருதுகள் வேண்டியவர்களுக்கு மட்டும் வழங்கப்படுகிறதா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு “கொடுத்தவர்களை போய் கேளுங்க” என்று கோவையில் பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் காட்டமாக பதிலளித்தார்.

கோவை சித்தாபுதூர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் நடந்த அன்னதான நிகழ்ச்சியைத் தொடங்கி வைக்க பிரபல பின்னணி பாடகர் கே.ஜே.ஜேசுதாஸ் நேற்று கோவை வந்தார்.

நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த பின்பு, அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

“எனக்கு பத்ம விபூஷண் விருது கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கடவுள் அருளால் எனக்கு இது கிடைத்துள்ளது. இதற்காக நான் அதிகம் சந்தோஷம் அடைவதில்லை. மற்ற விருதுகளை பெற்றால் எவ்வளவு மகிழ்ச்சி அடைவேனோ அதைபோலவே இந்த விருதையும் பெற்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். கடவுள் அருளால் அனைத்தும், அனைவருக்கும் கிடைக்கும்.

நாம் மற்றவர்களுக்கு உதவி செய்வதை குறிக்கோளாக கொண்டிருக்க வேண்டும். இங்கு நடைபெற உள்ள பாட்டு கச்சேரியில் பாட இருப்பதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்று அவர் கூறினார்.

2016-ம் ஆண்டு திரைப்படங்களுக்கு தேசிய விருதுகள் வழங்கப்பட்டதில் பாரபட்சம் காட்டப்படுகிறது, வேண்டியவர்களுக்கு மட்டும் விருதுகள் வழங்கப்படுகிறது என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே அதுபற்றி தங்களின் கருத்து என்று செய்தியாளர் கேட்டதற்கு “குற்றச்சாட்டை எழுப்பியவர்களையும், தேசிய விருதுகள் வழங்கியவர்களையும் போய் கேளுங்கள்” என்று காட்டமாக பதிலளித்தார்.

மேலும், இசையமைப்பாளர் இளையராஜா தனது பாடல்களை மேடைகளில் பாடக்கூடாது என்று எஸ்.பி.பால சுப்பிரமணியத்துக்கு வக்கீல் நோட்டீசு அனுப்பியுள்ளாரே? அது பற்றி கருத்து கேட்டதற்கு, “நான் யாருக்கும் வக்கீல் நோட்டீசு அனுப்பவில்லை. வக்கீல் நோட்டீசு அனுப்பியவரை போய் கேளுங்கள்” என்று கூறிவிட்டு வேகமாக எழுந்துச் சென்று விட்டார் கே.ஜே.ஜேசுதாஸ்.