natarajan liver transplantation mystery and questions

சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு கல்லீரல் மற்றும் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சைக்குப் பின் நடராஜன் நலமாக உள்ளதாக குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது. அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துவிட்டது. 

ஆனால், அவரது அறுவை சிகிச்சைக்காக உறுப்புகள் பெறப்பட்டது மட்டும் மர்மமாகவே உள்ளது. குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையும் அதன்மூலம் எழும் கேள்விகளும்...

குளோபல் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கை:

தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் கடந்த மாதம் 30-ந் தேதி கார்த்திக் என்ற இளைஞர் தலைக் காயத்துடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவருடைய பெற்றோருக்கு நோயாளியின் நிலை குறித்து டாக்டர்கள் ஆலோசனை வழங்கினார்கள். ஆனால் அவரது பெற்றோர் தனியார் மருத்துவமனைக்கு கார்த்திக்கை அழைத்துச் செல்ல முடிவு செய்து எங்கள் மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.

அவருக்கு தலைக்காயத்துடன், எலும்பு முறிவு உள்பட வேறு பல காயங்களும் ஏற்பட்டு இருந்தன. தொடர்ந்து அவருக்கு நரம்பியல் நிபுணர்கள் மற்றும் அவசர சிகிச்சை அளிக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனளிக்காததால் அவர் அக்டோபர் 3-ஆம் தேதி மூளைச்சாவு அடைந்தார். அவரது குடும்பத்தினரிடம் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிக்கலாம் என்று டாக்டர்கள் ஆலோசனை கூறினர்.

அதன்படி அவர்களுடைய குடும்பத்தினரும், “கார்த்திக் இறந்துவிட்டாலும் அவருடைய உறுப்புகளை தானமாக பிறருக்கு வழங்குவதன் மூலம் அவர் உயிர்வாழ்வதாகவே நாங்கள் கருதுகிறோம். எனவே கார்த்திக்கின் கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகம் ஆகியவற்றை தானமாக அளிப்பதற்கு சம்மதிக்கிறோம்” என்று சம்மதம் வழங்கினர். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்கான அரசு விதிகளின்படி கல்லீரல், இதயம், நுரையீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் ஆகியவை குளோபல் மருத்துவமனைக்கு ஒதுக்கப்பட்டது.

அதில் 43 வயதான தமிழகத்தைச் சேர்ந்த ஆண் நோயாளிக்கு இதயம், 62 வயதான உத்தரப் பிரதேச ஆண் நோயாளிக்கு நுரையீரல், 74 வயதான ஆண் நோயாளிக்கு கல்லீரல் மற்றும் ஒரு சிறுநீரகம் பொருத்தப்பட்டது. 

இவ்வாறு குளோபல் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.

( மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் நடராஜனின் பெயர் குறிப்பிடப்படவில்லை. 74 வயது ஆண் நோயாளி என மட்டும்தான் குறிப்பிடப்பட்டிருந்தது.)

இதன் அடிப்படையில்தான், தஞ்சாவூரிலிருந்து கார்த்திக் சென்னை குளோபலுக்கு அழைத்து வரப்பட்டது தொடர்பான சந்தேகங்களும் கேள்விகளும் வலுக்கின்றன.

இந்த அறிக்கை எழுப்பும் கேள்விகள்:

1. ஏழை கூலித்தொழிலாளியான கார்த்திக்கின் குடும்பத்தினர், குளோபல் மருத்துவமனையில் வைத்து கார்த்திக்கிற்கு மேல்சிகிச்சை செய்யத் துணிந்தது எப்படி?

2. அதற்கான பண வசதி இல்லாதபோது கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு எப்படி அழைத்துச் சென்றனர்?

3. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற வேட்கையில் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். ஆனால் கல்லீரலும் சிறுநீரகமும் எப்போது கிடைக்கும் என ஏங்கிக் கொண்டிருக்கும் நடராஜன் அனுமதிக்கப்பட்டுள்ள அதே குளோபல் மருத்துவமனைக்குச் சென்றது எப்படி?

4. அது எதேச்சையாக நடந்ததா? அல்லது கார்த்திக் திட்டமிட்டு குளோபல் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாரா?

5. அப்படியென்றால் கார்த்திக்கை குளோபல் மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்தது யார்? 

6. அப்படி பரிந்துரை செய்தவர், எத்தனையோ மருத்துவமனைகள் இருந்தும் என்ன காரணத்திற்காக குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்தார்? குளோபல் மருத்துவமனையை பரிந்துரை செய்து அங்கு அழைத்து செல்வதால் அவருக்கு என்ன லாபம்?

7. கார்த்திக் உண்மையாகவே மூளைச்சாவு அடைந்தாரா? அல்லது மூளைச்சாவு அடைய வைக்கப்பட்டாரா?

என அடுக்கடுக்காக கேள்விகள் எழுகின்றன.