திருநங்கை நர்த்தகி நடராஜுக்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.
பெற்றோர் சூட்டிய பெயர் நடராஜ். பரதநாட்டிய குரு சூட்டியதோ நர்த்தகி நடராஜ். புகழ்பெற்ற நாட்டிய மணிகளை உருவாக்கிய கிட்டப்பா வீடு முன்பு நின்று நடராஜ் கோரிக்கையைத் தெரிவித்தபோது, நீ ஆணும் அல்ல... பெண்ணுமல்ல... உனக்கு நாட்டியம் கற்றுக் கொடுக்க விருப்பமில்லை என்று கூறியுள்ளார். அதற்கு நடராஜோ, நாட்டியத்தை உருவாக்கிய நடராஜரே ஓர் அர்த்தநாரிதானே என்றார்.

ஆனாலும் நடராஜை, கிட்டப்பா உடனே ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர், ஒருவழியாக ஏற்றுக் கொண்ட கிட்டப்பா, நர்த்தகி என்ற பெயரைச் சூட்டினார். தன் வீட்டில் தங்கவைத்து, தனக்கு தெரிந்த அனைத்தையும் கற்றுக் கொடுத்துள்ளார். இன்று அவர் நர்த்தகி நடராஜ் என்ற பெயரோடு உலா வருகிறார்.

பரதமே உயிர் மூச்சாக வாழ்ந்து வரும் நர்த்தகி நடராஜ், அமெரிக்கா, கனடா, பிரிட்டன், பிரான்ஸ், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில் பரதநாட்டியம் நடத்தாத நகரங்கள் இல்லை என்றே கூறலாம்.

ஒதுக்கிய உலகத்தை தன் திறமையால் ஜெயித்து காட்டி வரும் நடனக் கலைஞர் திருநங்கை நர்த்தகி நடராஜ்க்கு, தஞ்சை பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம், கெளரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்துள்ளது.

நர்த்தகி நடராஜ், தமிழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெறும் முதல் திருநங்கை ஆவார். கலைத்துறை சிறப்புக்காக இந்தியாவிலேயே முதன் முதலாக கௌரவ டாக்டர் பட்டம் பெறும் திருநங்கை என்ற சிறப்பை பெற்றவராவார்.
