சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்கள் 100-க்கும் மேற்பட்டோர், இலவச பஸ் பாஸ் வழங்கவில்லை என குற்றம் சாட்டி, போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை, நந்தனத்தில் அரசினர் ஆடவர் கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. 

இன்று வழக்கம்போல் வகுப்புகள் தொடங்கி நடைபெற்று வந்தன. இந்த நிலையில், திடீரென மாணவர்கள் ஒன்று திரண்டனர். அப்போது அவர்கள், இலவச பேருந்து பாஸ் வழங்க அவர்கள் வலியுறுத்தினர். கல்லூரி தொடங்கிய நாட்களில் இருந்தே இலவச பேருந்து பாஸ் வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

 

இது குறித்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகத்திடம் கேட்டதாகவும், இதுவரை எங்களுக்கு இலவச பேருந்து பாஸ் கிடைக்கவில்லை என்பதால், இந்த போராட்டம் நடத்துவதாக மாணவர்கள் கூறினர். மாணவர்கள் போராட்டம் நடத்துவதை அறிந்த கல்லூரி நிர்வாகம், போலீசுக்கு தகவல் அளித்தனர். இதனை அடுத்து கல்லூரி வாசலில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் தொடர்ந்து, வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.