மகள் திருமண ஏற்பாடுகளை கவனிக்கவும், திருமணத்தை நடத்தி வைக்கவும் தன்னை பரோலில் விட வேண்டும் என ராஜிவ் கொலையாளி நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

முன்னாள் பாரத பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் உள்ள இவர்கள், தங்களை விடுதலை செய்யக்கோரி பலமுறை கோரிக்கை விடுத்தனர்.

இதையொட்டி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா, 7 பேரையும் விடுதலை செய்ய முடிவு செய்தார். ஆனால், மத்திய அரசு அரசு அதற்கு தடை விதித்தது. 

இதைதொடர்ந்து பேரறிவாளனின் தாய், நீதிமன்றம் மற்றும் பிரதமர், குடியரசு தலைவர், முதலமைச்சர் என பலரையும் சந்தித்து, தனது மகனை பரோலில் விடும்படி கோரிக்கை விடுத்து வருகிறார். ஆனால், இதுவரை எந்த பலனும் இல்லாமல் உள்ளது.

இதற்கிடையில் கணவன், மனைவியான முருகன், நளினி ஆகியோர் மாதத்தில் ஒருநாள் சந்திக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. அந்த வேளையில், கடந்த சில மாதங்களாக தொடர்ந்து 2 முறை முருகனின் சிறை அறையில் இருந்து 2 செல்போன்கள், சிம்கார்டுகளை சிறை காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும், கடந்த வாரம் முருகன், சிறைத்துறை டிஜிபிக்கு கோரிக்கை மனு கொடுத்தார். அதில், 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளதால், வாழ்க்கை வெறுத்துவிட்டது. இதனால், உண்ணாவிரதம் இருக்க போவதாகவும், தன்னை ஜீவசமாதி அடைய அனுமதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

இந்நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, சென்னை உயர்நீதிமன்றத்தில், தன்னை பரோலில் விடும்படிபடி கோரிக்கை மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

வரும் நவம்பர் மற்றும் ஜனவரி மாதத்தில் தனக்கு பரோலில் வெளியே செல்ல அனுமதிக்க வேண்டும். தனது மகளின் திருமண ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அதில், கலந்து கொண்டு, மகள் திருமணத்தை நடத்தி வைக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.