தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க எழும்பூர் நீதிமன்ற நீதிபதி மறுப்பு தெரிவித்துள்ளார். ஆளுநர் மாளிகை அளித்த புகாரின் அடிப்படையில் நக்கீரன் இதழின் ஆசிரியர் நக்கீரன் கோபால் இன்று சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அவர், சிந்தாதரிப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரிக்கப்பட்டார். 

4 மணிநேரம் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் மீது தேச துரோக வழக்கும் போடப்பட்டுள்ளது. இதன் பின்னர், சென்னை,  திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபாய் மருத்துவமனைக்கு நக்கீரன் கோபால் அழைத்து செல்லப்பட்டு அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. மருத்துவமனையில் நக்கீரன்கோபால் இருந்தபோது, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரை சந்தித்துப் பேசினார். தமிழகத்தில் பாரபட்ச நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது என்றும் இது தொடர்ந்தால் மிக விபரீதமான விளைவுகளை ஆட்சியாளர்கள் சந்திக்க நேரிடும் 
என்றும், நக்கீரன் கோபாலை விடுவிக்காவிடில் விபரீதமான முடிவை சந்திக்க நேரிடும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார். 

நக்கீரன் கோபால், மருத்துவ பரிசோதனைக்குப் பிறகு, சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இந்த 
நிலையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் மற்றும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் ஆகியோர் நக்கீரன் கோபாலை சந்திப்பதற்காக நீதிமன்றத்துக்கு சென்றுள்ளனர்.  

இந்த நிலையில் நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இது தொடர்பான வழக்கு விசாரணையின்போது, நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர், தாம் பிரசுரித்த கட்டுரையில் ஆளுநரை எந்தவகையிலும் கோபால் மிரட்டவில்லை என்றார். நக்கீரன் கோபால் மீது ஐ.பி.சி. 124-வது பிரிவின்கீழ் வழக்குப்போட முகாந்திரமில்லை என்றும் அவர் வாதம் செய்தார். ஏப்ரல் மாதம் வெளியான கட்டுரைக்கு இப்போது நக்கீரன் கோபால் மீது வழக்கு போடப்பட்டுள்ளதாகவும் புகார். ஐபிசி 124 பிரிவின்கீழ் கைது செய்யது செல்லாது என்றும் வாதம் செய்தார். 

ஆளுநரின் ஒப்புதல் பெற்று கோபால் மீது அவரது செயலாளர் வழக்கு தொடர்ந்து உள்ளாரா? என்று நீதிபதி, அரசு தரப்பு வழக்கறிஞரிடம் கேள்வி எழுப்பினார். ஆளுநர் உத்தரவின்பேரில் வழக்கு போடப்பட்டதா என்பது தெரியாது என்று போலீஸ் தரப்பில் பதிலளிக்கப்பட்டது. நக்கீரன் கோபால் வழக்கு குறித்த நீதிமன்ற விசாரணையில், 124 சட்டப்பிரிவின்கீழ் வராத ஒரு வழக்கில் கைது செய்வது இந்தியாவிலேயே முதல் முறை என்று இந்து ராம் கூறினார்.

  

இந்த வழக்கில் ஊடக பிரதிநிதியாக இந்து என்.ராம் வலியுறுத்தி கூறினார்.124 பிரிவின்கீழ் நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டதற்கு முகாந்திரம் இல்லை என்றும் நக்கீரன் கோபால் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார். குடியரசு தலைவருக்கோ, ஆளுநருக்கோ நேரடியாக மிரட்டும் வகையிலும், பணியை தடுக்கும் வகையிலும் கட்டுரை இருக்கவில்லை. அப்படி உள்ளபோது 124 பிரிவின்கீழ் கைது செய்யப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் தெரிவிக்கப்பட்டது.

 

காவல் துறை தரப்பில், நக்கீரன் இதழில், ஆளுநரை மிரட்டும் வகையில் கட்டுரை இருந்ததால்தான் அவரை கைது செய்தோம் என்று வாதம் வைக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, சிறிது நேரம் ஒத்தி வைத்தார். இதனிடையே கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபால் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தார். நக்கீரன் கோபால் மீதான விசாரணை முடிந்த நிலையில் நீதிபதி தீர்ப்பை வாசித்தார். நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க நீதிபதி மறுத்தார். தேசதுரோக வழக்கில் கைது செய்யப்பட்ட நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட நீதிபதி மறுப்பு தெரிவித்தார். இன்று மாலையே நக்கீரன் கோபால் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.