கரூர்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து கரூரில் இரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் 31 பேரை காவலாளர்கள் கைது செய்தனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த கெடு முடிந்த போதிலும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனால் மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. 

அதன்படி, கரூரில், நாம் தமிழர் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் வழக்குரைஞர் நன்மாறன் தலைமையில் நேற்று இரயில் மறியல் போராட்டம் நடத்த வெங்கமேடு இரயில்வே பாலத்தின் அடிப்பகுதியில் திரண்டு நின்றனர். 

அப்போது, பகல் 12 மணி அளவில் டேராடூன் - மதுரை விரைவு இரயில் கரூர் இரயில் நிலையம் நோக்கி வந்துக் கொண்டிருந்தது. அப்போது அங்கு திரண்டிருந்த நாம் தமிழர் கட்சியினர் கையில் கொடியுடன் இரயிலை மறிக்க தண்டவாளத்தில் ஓடினர். 

தண்டவாளத்தில் கும்பலாக வருவதைக் கண்ட இரயில் என்ஜின் ஓட்டுநர் உடனடியாக இரயிலின் வேகத்தைக் குறைத்து வண்டியை நிறுத்தினார். திடீரென இரயில் நின்றதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனையடுத்து இரயில் முன்பு நாம் தமிழர் கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர். இரயில் என்ஜின்மீது கட்சி கொடியையும் சொருகினர். 

இரயிலை நடுவழியில் மறித்து போராட்டம் நடத்தப்படுகிறது என்ற தகவலை அறிந்ததும் காவல் ஆய்வாளர்கள் செந்தில்குமரன் (வெங்கமேடு), செந்தில்குமார் (வாங்கல்), சந்திரசேகர் (பசுபதிபாளையம்) மற்றும் காவலாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 

அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு பெண் உள்பட 31 பேரை காவலாளர்கள் கைது செய்தனர். கைதானவர்களை மினி பேருந்தில் அழைத்து சென்று அருகில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். 

இதனையடுத்து இரயில் அந்த இடத்தில் இருந்து 20 நிமிடம் தாமதமாக பகல் 12.20 மணியளவில் புறப்பட்டு கரூர் இரயில் நிலையத்தை அடைந்தது.