mystery object fallen from sky fallen place made dent
கரூர்
கரூரில் வானத்தில் இருந்து விழுந்த மர்ம பொருளாலும், விழுந்த இடத்தில் பள்ளம் ஏற்பட்டதாலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கரூர் மாவட்டம், சேமங்கி அருகே செல்வநகரை சேர்ந்தவர் காத்தான் (55). இவரது வீட்டு வாசலில் நேற்று முன்தினம் இரவு வானத்தில் இருந்து அதிக சத்தத்துடன் மர்ம பொருள் ஒன்று வந்து விழுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த காத்தான் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இருந்து வெளியே வரவில்லை. வெடிபொருளாக இருக்கலாம் என்று கருதி வீட்டுக்குள்ளேயே இருந்துவிட்டனர்.
இந்த நிலையில், நேற்று காலை விடிந்ததும் காத்தான் மற்றும் குடும்பத்தினர் வீட்டின் வெளியே வந்து பார்த்தபோது அந்த மர்ம பொருள் எந்திரத்தின் இரும்புத் துண்டு போன்று காணப்பட்டது. மேலும் விழுந்த இடத்தில் பெரிய பள்ளம் ஏற்பட்டிருந்தது.
இதுகுறித்து வேட்டமங்கலம் (மேற்கு) கிராம நிர்வாக அதிகாரி பூபதிக்கும், வேலாயுதம்பாளையம் காவலாளர்களுக்கும் அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்பேரில் காவலாளர்களும், கிராம நிர்வாக அதிகாரி பூபதியும் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். அந்த இரும்பு துண்டின் எடை 5 கிலோவுக்கு மேல் இருக்கும். மேலும, எதற்குரிய பொருள் என்பதை கண்டறிய முடியவில்லையாம்.
இதனையடுத்து அந்த இரும்புத் துண்டு ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க எடுத்து செல்லப்பட்டது.
வானில் இருந்து விழுந்த அந்த மர்ம பொருளால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.
