திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் மகள் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டதற்கு மருமகன் தான் காரணம் என்று தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், தூசி அருகே உள்ள அப்துல்லாபுரம் ராஜீவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் சுரேஷ் (28). இவரது மனைவி மலர்கொடி (26). இவர்களுக்கு கௌசிக் (5) நரேன் (2) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். 

கணவன் - மனைவி இருவரும் மாங்கால் கூட்ரோட்டில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்ற நிலையில் சுரேஷ் தான் வாங்கும் சம்பளத்தை வீட்டுச் செலவுக்கு கொடுக்காமல் குடித்துவிட்டு மலர்கொடியை தினமும் அடித்து வந்தாராம். 

தகராறு ஏற்படும்போது மலர்கொடி, தூசி அருகே புன்னை புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தாய் நீலாவதி வீட்டிற்கு சென்றுவிடுவார். பின்னர், நீலாவதி தனது மகளை சமாதானப்படுத்தி மீண்டும் வீட்டுக்கு அனுப்பி வைப்பார்.

இந்த நிலையில் கடந்த 5-ஆம் தேதி மலர்கொடி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் பலத்த தீக்காயமடைந்த அவர் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு மருத்துவமனையிலும், பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனளிக்காமல் நேற்று முன்தினம் மலர்கொடி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து மலர்கொடியின் தாய் நீலாவதி தூசி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதில், "எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது என்றும், மகள் சாவிற்கு மருமகன் சுரேஷ்தான் காரணம்" என்றும் கூறியுள்ளார். 

அந்த புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளார் பாஸ்கரன் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.