muthuramalingam name for the Madurai airport
இராமநாதபுரம்
மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் பெயரை சூட்டாவிட்டால் மூவேந்தர் முன்னேற்ற கழகத்தினர் இலட்சக்கணக்கானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவோம் என்று அக்கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி. ராஜா தெரிவித்தார்.
மூவேந்தர் முன்னேற்றக் கழகத்த்தின் மாநில அமைப்புச் செயலாளர் சி.எம்.டி. ராஜா நேற்று இராமநாதபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அதில், "முத்துராமலிங்கத் தேவர் சாதி தலைவர் அல்ல. அனைவராலும் போற்றக் கூடிய தேசியத் தலைவர். கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை விமான நிலையத்திற்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் என்று மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்து வருகிறார்.
இந்தக் கோரிக்கையை அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமியும் இதற்காக மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளார்.
இனியும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக மதுரை விமான நிலையத்திற்கு பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்ட வேண்டும். இல்லையென்றால் மூ.மு.க. தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் தலைமையில் இலட்சக்கணக்கானவர்களை திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
அதேபோல் சிவகங்கை அரசு கலைக்கல்லூரிக்கு மாமன்னர் மருதுபாண்டியர் பெயர் சூட்ட வேண்டும் எனவும், அகமுடையர் இனத்தை தேவர் என அறிவித்து அரசிதழில் வெளியிட வேண்டும்" எனவும் அவர் தெரிவித்தார்.
