மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதிக்கு, இசுலாமியர்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது காஞ்சி மக்கள் மட்டுமல்லாது அனைவரையும் நெகிழச் செய்துள்ளது.

காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திரருக்கு நேற்று காலை மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் உடனடியாக காஞ்சி சங்கர மடத்துக்கு அருகே உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து, அவரது உடல், பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. 

ஜெயேந்திரரின் உடலுக்கு தமிழக ஆளுனர் உட்பட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். ஆன்மீகவாதிகள், அரசியல் கட்சி தலைவர்கள், பொதுமக்கள் என பலர் அஞ்சலி செலுத்தினர். 

இந்த நிலையில், காஞ்சியைச் சேர்ந்த  இசுலாமிய பெருமக்களும், ஜெயேந்திரருக்கு இறுதி மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரத்தில் உள்ள பெரிய மசூதியான ஜும்மா மசூதியில் இருந்து புறப்பட்ட இசுலாமிய மக்கள், காஞ்சி மடத்துக்குள் சென்று ஜெயேந்திரரின் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். 

இதன் பின்னர், அவர்கள் அனைவரும், ஜெயேந்திரருக்காக பிரார்த்தனை (து ஆ) செய்தனர். இதன் பின்னர், இளைய மடாதிபதி விஜயேந்திரரை சந்தித்து ஆறுதல் கூறிச் சென்றனர்.

இது குறித்து, ஜும்மா மசூதியின் செயலாளர் ஜே.முகமது பேசுகையில், மகா பெரியவர் காலத்தில் இருந்தே, நாங்கள், காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புடன் நட்பு கொண்டிருக்கிறோம். காஞ்சிபுரம் பகுதியில் சமய நல்லிணக்கம் நிலவ காஞ்சி மடம் ஒரு முக்கியக் காரணம் என்றார். 

இந்த பகுதியில் மசூதி கட்டக்கூடாது என்று எதிர்ப்பு வந்தது. அப்போது, மகா பெரியவர் மசூதி கடவுள் உலவும் பகுதி. அதைக் கட்டக் கூடாது என்று சொல்ல யாருக்கும் உரிமை இல்லை என்று கூறி மசூதி எழுப்ப உதவினார் என்று முகமது கூறினார். மறைந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜெயேந்திருக்கு, இசுலாமியர்கள், இறுதி மரியாதை செலுத்தியது காஞ்சி மக்களை மட்டுமல்ல படிப்பவர்களின் மனதையும் நெகிழ்ச் செய்து வருகிறது.