சிறை வாழ்க்கை வெறுத்துவிட்டதால், ஜீவசமாதி அடையே போகிறேன். அதற்கு அனுமதிக்க வேண்டும் என ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள முருகன் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி, கடந்த 1991ம் ஆண்டு, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக முருகன், நளினி, பேரறிவாளன், சாந்தன் உள்பட 7 பேரை சிபிஐ போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதில் முருகன், நளினி ஆகியோர் வேலூர் மத்திய சிறையில் உள்ளனர். இவர்கள் கணவன், மனைவி என்பதால், இருவரும் மாதத்தில் ஒரு சந்தித்து பேச, நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. சுமார் 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள 7 பேரும், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், மத்திய அரசின் நிர்பந்ததால், அதில் தடை ஏற்பட்டுள்ளது.

 

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக முருகனின் சிறை அறையில் செல்போன்கள், சிம் கார்டுகளை சிறை காவலர்கள் கைப்பற்றினர். அவர் யாரிடம் பேசினார். என்ன பேசினார் என்பதை போலீசார் விசாரித்தனர். ஆனால், அதுபற்றி எந்த தகவலும் இதுவரை வெளிவரவில்லை.

இந்நிலையில், சிறையில் உள்ள முருகன், சிறைத்துறை டிஐஜிக்கு ஒரு மனு அனுப்பியுள்ளார். அதில்,  கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் உள்ள தனக்கு வாழ்க்கை வெறுத்துவிட்டது. இதனால், வரும் ஆகஸ்ட் 18ம் தேதி முதல் உணவு சாப்பிடாமல், பட்டினி கிடந்து இறக்கப்போவதாகவும், அவரை ஜீவசமாதி அடைய, அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

ராஜிவ் கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு, சிறையில் உள்ள முருகன், ஜீவசமாதி அடையவதற்காக அனுமதி கேட்டு மனு அளித்த சம்பவம் சிறைத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.