தமிழ்நாட்டை அவ்வப்போது பதம் பார்க்கும் கொடூர கொலைகள்; முதல்வர் பிரம்பை கையில் எடுத்தே ஆகவேண்டும்!!
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு இருக்கும் சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக உயிர்பலிகள் ஏற்பட்டு மக்கள் மத்தியில் ஒருவித பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மாதம் கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் அருந்தி 60க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்து இருந்தனர். இதற்குக் காரணம் கள்ளச்சாராயத்தில் மெத்தனால் கலந்து இருந்தது தான் காரணம் என்று ஆய்வில் தெரிய வந்தது.
ஆனால், தமிழ்நாட்டில் கள்ளக்குறிச்சி, கல்வராயன்மலை போன்ற இடங்களில் கள்ளச்சாராயம் காய்ச்சப்படுகிறது என்பது ஊர் அறிந்த உண்மையாக இருந்து வந்துள்ளது. போலீசாரும் அறியாமல் இல்லை. அரசியல்வாதிகளும் அறியாமல் இல்லை. ஊர் அறிந்தே மிகப்பெரிய தவறு நடந்து இருக்கிறது என்பதைத்தான் இந்த உயிரிழப்புகள் காட்டுகின்றன. போலீசாரும், அரசியல்வாதிகளும் களத்தில் இறங்கி கறாராக பணியாற்றி இருந்தால், இந்த உயிரிழப்புகளை தவிர்த்து இருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக இருக்கிறது. மெத்தனால் புதுச்சேரி வழியாக தமிழ்நாட்டிற்குள் வரும்போது, சோதனையில் சிக்காமல் போவதற்கும் வாய்ப்பில்லை.
முதல்வரின் கீழ் தான் காவல்துறை வருகிறது. அப்படி என்றால், முதல்வரே இந்த விஷயத்தில் தலையிட வேண்டும் என்பது இல்லை. காவல்துறை அதிகாரிகள் உடனடியாக செயல்பட்டு கள்ளச்சாராயத்தை கட்டுக்குள் கொண்டு வந்து இருக்க வேண்டும். ஏன் கொண்டு வரவில்லை? என்பதுடன் முதல்வருக்கும் அவப்பெயர் தேடிகொடுத்தது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. இதுபோன்ற தருணங்களில் முதல்வரே லத்தியை கையில் எடுக்க வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது. பாரபட்சம் இன்றி குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். உடனுக்குடன் தண்டனை நிறைவேற்ற வேண்டும். காலதாமதம் என்பது மேலும் பல சிக்கல்களை உருவாக்குவதுடன், குற்றவாளிகள் தப்பித்து செல்வதற்கும் வழிகளை ஏற்படுத்தி கொடுப்பதாக ஆகிவிடும்.
கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்கள் பணம் படைத்த முதலாளிகள் இல்லை. பணக்காரார்கள் இல்லை. மது பழக்கத்திற்கு அடிமையான அன்றாட வருமானம் பார்க்கும் ஏழைகள். அவர்களுக்கு வேண்டியது எல்லாம் மலிவான விலையில் மது கிடைத்தால் போதும் என்பதுதான். மதுவை ஒழிக்க முடியாது. ஆனால், மாற்றாக என்ன செய்யலாம் என்பதைத்தான் அரசு நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.
கள்ளக்குறிச்சி காயங்கள், துயரங்கள் மறைவதற்கு முன்பே சென்னை, பெரம்பலூரில் வசித்து வந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்க் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை தமிழ்நாட்டையே உலுக்கி இருக்கிறது. உணவு டெலிவரி செய்ய வந்தவர்களைப் போல் நடித்து சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங்க் உயிரிழந்தார். இதற்கு பல்வேறு மட்டங்களில் இருந்து கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளது. மக்களும் அச்சத்தில் உள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங் கொலை:
தேர்தல் சமயத்தில் துப்பாக்கி வைத்துக் கொண்டு இருக்கக் கூடாது என்பதால் காவல்துறையிடம் துப்பாக்கியை ஆம்ஸ்ட்ராங் ஒப்படைத்து இருந்ததாகவும், இதை அறிந்து வைத்தே அவரை திட்டமிட்டு கொன்றதாகவும் முன்பு கூறப்பட்டது. ஆனால், இதை காவல்துறை மறுத்து இருந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் துப்பாக்கி ஆம்ஸ்ட்ராங்கிடம் திருப்பி கொடுக்கப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இந்த திட்டத்தை தீட்டிக் கொடுத்தது அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் என்ற செய்தியும் பரவி வருகிறது. ஆம்ஸ்ட்ராங் மீது ஆரம்பத்தில் பல்வேறு வழக்குகள் இருந்துள்ளன. இவற்றை நீதிமன்றத்தில் சந்தித்து அவற்றில் இருந்து விடுதலை ஆகி இருக்கிறார். ஆனாலும், அந்த கசப்புணர்வு அவர் மீது இருந்தே வந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆம்ஸ்ட்ராங்கை எளிதில் யாரும் நெருங்க முடியாத அளவிற்குத் தான் இருந்துள்ளார்.
பாதுகாப்பு வளையத்திற்குள் இருக்க வேண்டியவர் ஆம்ஸ்ட்ராங் என்பதை உளவுத்துறை ஏற்கனவே எச்சரித்துள்ளது. அப்படி என்றால் முழு பாதுகாப்பையும் அவருக்கு காவல்துறை வழங்கி இருக்க வேண்டுமா? ஏன் வழங்கவில்லை என்ற கேள்வியும் எழுந்துள்ளது. யார் இதை தடுத்தது? யார் பின்னணியில் இருக்கிறார்கள்? என்பதற்கு விடை கிடைக்குமா?
இது எதற்காக நடந்த கொலை? பழைய பகையா? அரசியல் நோக்கம் இருக்கிறதா? போன்ற பல்வேறு கோணங்களில் விசாரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு இருக்கிறது. பொதுவாக இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும்போது காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு செல்வது உண்டு. மக்களிடம் அச்சத்தை போக்குவதற்கு பேரணி நடத்தப்படுவது உண்டு. அவையெல்லாம் நடந்ததா? என்றால் இல்லை. ஏன் என்ற கேள்வியும் எழுகிறது. யார் தடுக்கிறார்கள்? என்ன தடுக்கிறது போன்ற அச்சங்கள் எழுகின்றன.
ஆற்காடு சுரேஷ்ஷின் சகோதரர்கள் உள்பட பத்துக்கும் மேற்பட்டவர்கள் காவல்துறையில் சரணடைந்து இருக்கின்றனர். ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கவே இந்தக் கொலை என்றும், கூலிப்படை திருநெல்வேலியில் இருந்து வந்தது என்றும் கூறப்படுகிறது. மாநிலத்தின் தென்பகுதிகளில் காலம் காலமாக இருக்கும் சாதி பாகுபாடுகள், கொலைகள் தற்போது தலைநகருக்கும் எட்டி இருக்கிறதா என்பது கூடுதல் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு சட்டசபை துவங்குவதற்கு முன்பு கள்ளக்குறிச்சி விஷச்சாராயம் என்றால், சட்டசபை முடிந்த பின்னர் ஆம்ஸ்ட்ராங் கொலை என்று தமிழ்நாடு உறைந்து போயுள்ளது. நிர்வாகத்தில் எங்கே இடைவெளி? தீர்வு என்ன? எங்கு உண்மை மறைந்து இருக்கிறது போன்ற பல்வேறு கேள்விகள் எழத்தான் செய்கின்றன. மக்களின் மனதில் அச்சத்தை போக்குவதற்கு முதல்வர் பிரம்பை கையில் எடுப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது.
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என்று கூறுவதற்கு இல்லை. தேசிய முற்போக்கு கட்சி தலைவரும், நடிகருமான விஜயகாந்த் மரணத்தின்போது எந்த அசம்பாவிதம் இல்லாமல் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. பாதுகாப்பு ஏற்பாடுகள் தரமாக செய்யப்பட்டு இருந்தது. அதேபோல், ஆம்ஸ்ட்ராங் உடல் மூன்று நாட்களுக்குப் பின்னர் அடக்கம் செய்யப்பட்டாலும், எந்தவித அசம்பாவிதம் ஏற்படாமல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. கள்ளக்குறிச்சியிலும் சம்பவங்கள் கைமீறி செல்லாமல் பார்த்துக் கொள்ளப்பட்டது. அவ்வப்போது ஆட்சியாளர்களுக்கு கரும்புள்ளி விழுவது சகஜம் என்றாலும், அவற்றை உடனடியாக களைய வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.