சென்னையைச் சேர்ந்த பத்து வயது சிறுவன் கடத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில், தேடப்பட்டு வந்த கள்ளக்காதலனை போலீசார் கைது செய்துள்ளனர். 

சென்னை, நெசப்பாக்கம் ஏழுமலை தெருவை சேர்ந்தவர் கார்த்திகேயன் (38). இவர் தனியா நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (34). இவர் அண்ணாசாலையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருகின்றார். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகன் ரித்தீஷ் சாய் (10). நெசப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வருகின்றார்.

மஞ்சுளாவுக்கும் சேலையூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவருக்கும் இடையே தவறான உறவு இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த கார்த்திகேயன், நாகராஜிடம் பலமுறை எச்சரிக்கை செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று டியூசன் சென்ற சிறுவன் ரித்தீஷ் சாய், வீடு திரும்பவில்லை. டியூசன் சென்டருக்கு, கார்த்திகேயன் சென்று விசாரித்தபோது, நாகராஜ் என்ற நபர், ரித்தீசை அழைத்து சென்றதாக கூறியுள்ளனர்.

கார்த்திகேயன், உடனே நாகராஜுடன் போனில் தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக கார்த்திகேயன், எம்.ஜி.ஆர்.நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கூறியிருந்தார். 

இந்த புகாரை அடுத்து, போலீசார், தலைமறைவாக இருந்த நாகராஜை தேடி அவரது சொந்த ஊரான வேலூருக்கு சென்றனர். அங்கு மறைந்திருந்த நாகராஜைப் பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, மஞ்சுளாவிற்கும் தனக்கும் இருந்த உறவுக்கு சிறுவன் ரித்தேஷ் சாய் இடையூறாக இருந்ததாகவும், இந்த விவகாரம் காவல்துறை வரை சென்றதற்கு சிறுவன் ரித்தேஷ் சாய்தான் காரணத்தாலும், ரித்தேஷை கொலை செய்ய முடிவு செய்தேன்.

அதன்படி ரித்தேஷை நேற்று டியூசனில் இருந்து அழைத்துசென்று மறைவான இடத்தில், மது பாட்டிலால் அடித்து கொலை செய்து புதைத்ததாக வாக்குமூலம் கொடுத்துள்ளான் நாகராஜ். இதையடுத்து, நாகராஜ் மற்றும் சிறுவனின் தாய் மஞ்சுளாவை போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொலையில் வேறு யாருக்கும் தொடர்பு உண்டா என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப்பட்ட சிறுவன் ரித்தேஷின் உடல், பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

ரித்தேஷின் தந்தை கூறும்போது, எனது மகன் கொலையில் என் மனைவிக்கும் தொடர்பு இருக்கலாம். எப்படி இருந்தாலும் என் மகன் கொலையில் யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்களோ அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் கார்த்திகேயன் கூறியுள்ளார்.