சென்னை பல்லாவரத்தில் அதிமுக சிறுபான்மை பிரிவு நிர்வாகி பட்டப்பகலில் மர்ம நபர்களால் வெட்டிக் கொல்லப்பட்டார். சென்னை பல்லாவரம் திருநீர்மலைப் பகுதியைச் சேர்ந்தவர் அபுசாலி(36). இவர் ஜே.ஜே. ரூபிங் என்ற பெயரில் குரோம்பேட்டை திருநீர்மலையில் மேற்கூரைகள் மற்றும் பைப்புகள் விற்பனை செய்யும் நிறுவனம் நடத்தி வந்தார். இவர் அதிமுகவில் பல்லாவரம் பகுதியில் சிறுபான்மைப்பிரிவு செயலாளராகவும் இருந்து வந்தார். 

இந்நிலையில், இன்று தனது விற்பனை நிறுவனத்தில் வழக்கம்போல் அமர்ந்து தனது பணிகளை பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அவரது கடைக்கு வேகமாக வாகனத்தில் வந்த மர்ம கும்பல் ஒன்று கடைக்குள் புகுந்து அபுசாலியை சரமாரியாக வெட்டியது. இதனை சற்றும் எதிர்பார்க்காத அபுசாலி தப்பியோட முயன்றார். ஆனால், அந்த கும்பல் திட்டமிட்டபடி, அவரை வெட்டிச்சாய்த்து விட்டு தப்பியோடியது. ரத்த வெள்ளத்தில் கடைக்குள் விழுந்த அபுசாலி, அதே இடத்தில் பலியானார். 

இந்த கொலை குறித்து தகவல் அறிந்து வந்த பல்லாவரம் போலீசார் அபுசாலி உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை வெட்டிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் அவரது கடைக்குள்ளேயே வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் பல்லாவரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.