சென்னை மெரீனாவில் கத்தி குத்துக்களுடன் வடமாநில வாலிபர் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
சென்னை மெரீனா கடற்கரையில் கடந்த வாரம் ஜல்லிகட்டுக்கு ஆதரவாக மிகபெரிய அளவில் வாலிபர்களின் எழுச்சி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர போலீசார் மிகுந்த சிரமப்பட்டனர்.
காந்தி சிலை முதல் உழைப்பாளர் சிலை வரை திரண்டிருந்த மாணவர்கள் இளைஞர்கள் கூட்டத்தால் மெரீனா கடற்கரையே பரபரப்பாக இருந்தது.

23ஆம் தேதி போராட்டக்காரர்களை அகற்றும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டபோது பெரிய அளவில் வன்முறை வெடித்தது.
இதனையடுத்து மெரீனா கடற்கரை முழுவதும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது.
பிப் 12 வரை இந்த தடை நீடிக்கும் என்று போலீசார் அறிவித்திருந்தனர்.
இதனையடுத்து மெரீனாவில் சட்ட ஒழுங்கு போலீசார் தவிர அதிரடிப்படை போலீசார், ஆயுதப்படை போலீசாரும் குவிக்கபட்டிருநதனர்.
நான்கு பேருக்கு மேல் யாரும் கூடாமல் கண்காணிப்போம் என்று அறிவித்திருந்தனர்.

வழக்கமாக மெரீனா கடற்கரையில் இருப்பதை விட கூடுதலாக 144 சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அனைத்து பாதுகாப்புகளையும் மீறி நேற்று இரவு வடமாநில வாலிபர் ஒருவர் மர்ம ஆசாமிகளால் கத்தியால் குத்தி கொல்லப்பட்டுள்ளார்.
காலையில் வாக்கிங் சென்றவர்கள் வாலிபர் ஒருவர் கத்தி குத்துக்களுடன் பிணமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்த பின்னரே கொலை சம்பவம் பற்றி அனைவருக்கும் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டு கிடந்த வாலிபர் உடலில் ஐந்துக்கும் மேற்பட்ட கத்தி குத்துக்கள் இருந்தது.
சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப் - டாப்பாக உடையணிந்து இருந்தார்.
போலீசார் அவரது சட்டை பையில் இருந்து அவரது பொருட்களை அப்புறப்படுத்தியபோது அவரது ஆதார் கார்டு கிடைத்தது.
அதில் அவரது பெயர் நூர் ஹுசைன் அன்சாரி என்பதும் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்துள்ளது.

நள்ளிரவில் கடற்கரை மனற்பரப்பிற்குள் அத்தனை பாதுகாப்பையும் மீறி வாலிபர் எப்படி சென்றார்?
அவரை கொலை செய்த ஆசாமிகள் எப்படி உள்ளே சென்றனர்? என்பது மர்மமாகவே உள்ளது.
144 தடை உத்தரவு போடப்பட்டதற்கு காரணமே சட்டம் ஒழுங்கை சரியான முறையில் அமுல்படுத்தவும் குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுப்பதற்கு மட்டுமே.
அதிலும் மெரீனா கடற்கரைக்கு 144 தடை சட்டம் மாணவர்கள் கூடாமல் இருப்பதற்கு போடப்பட்ட சட்டமாகும்.
ஆனால் இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் மிக சாதாரணமாக ஒரு கொலை நடந்திருக்கிறது.
கொலையையே தடுக்க முடியாதவர்கள் மாணவர்கள் கூடுவதை எங்கே தடுக்க போகிறார்கள் என்று அங்கு வாக்கிங் சென்றவர்கள் கேள்வி எழுப்பினர்.
