murder in chennai robo hotel

ரோபோ மூலம் வாடிக்கையாளர்களுக்கு உணவு சப்ளை செய்யும் வகையில் சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள ஓட்டல் ஒன்றில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிமுகப்படுத்தப்பட்டது. வாடிக்கையாளர்களுக்கு ரோபோ உணவு சப்ளை செய்து வரும் தகவல் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்த ஓட்டலுக்கு ஒரு முறையாவது செல்ல வேண்டும் என்ற எண்ணம் பலருக்கு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த ஓட்டலில் நடந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இந்த உணவகத்தில் மேற்கு வங்கத்தை சேர்ந்த ஈனோஸ்ராய் என்பவர் மேற்பார்வையாளராகவும் சப்ளையராகவும் பணியாற்றினார். அனில்குரன் சப்ளையராக
உள்ளார். வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்யும் உணவை, ரோபோக்கள் மூலம் சப்ளை செய்யப்பட்டு வந்தது. 

இந்த நிலையில், நேற்றிரவு வாடிக்கையாளர் ஒருவர் கொடுத்த ஆர்டருக்குப் பதிலாக வேறு உணவு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வாடிக்கையாளர், ஊழியர்களிடம் தகராறு செய்து விட்டு சென்று விட்டார். இதன் பின்னர், மேற்பார்வையாளர் ஈனோஸ்ராய்க்கும், சப்ளையர் அனில்குரனுக்கும் ஆர்டர் மாறியது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. 

இதில் ஆத்திரமடைந்த அனில்குரான், ஈனோஸ் ராயை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ஈனோஸ்ராய் பலத்த காயமடைந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஈனோஸ்ராய் உயிரிழந்து விட்டார். இது குறித்து செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அனில்குரானைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் ஒருவர் கூறுகையில், இந்த ஓட்டலில் ரோபோக்கள் சப்ளை செய்கின்றன. ரோபோக்கள் சப்ளை செய்யும் உணவுகளை ஊழியர்கள்தான் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்க வேண்டும். வாடிக்கையாளர் ஒருவர் சூப் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், ரோபோ கொண்டு சென்ற ப்ரைடு ரைஸ் மாற்றி கொடுக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளரும் ஓட்டலில் இருந்து சென்று விட்டார். ஆனால், ஆர்டர் மாற்றிக் கொடுக்கப்பட்டது குறித்து ஈனோஸ் ராய்க்கும், அனில்குரனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறினார். இவர்கள் இருவருக்கும் இடையே சீனியர், ஜீனியர் பிரச்சனை இருந்தது எங்களுக்கு தெரிய வந்தது. இதுதான் கொலைக்கு முக்கிய காரணம் என்று அவர் கூறினார்.