murder in chennai
சென்னை முகப்பேரில் ஒரு ஆணின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு கால்வாயில் வீசப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள மழைநீர் கால்வாயில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள், மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து அந்த பகுதியில் துப்புரவுப் பணியை மேற்கொண்ட பணியாளர்கள், அங்கிருந்து ஒரு கோணிப்பையை குப்பைத்தொட்டியில் போடுவதற்காக இழுத்து சென்றுள்ளனர். அப்போது கயிறு அவிழ்ந்து பையிலிருந்து உடலின் பாகங்கள் கீழே விழுந்தன.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த துப்புரவுப் பணியாளர்கள், போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடல் பாகங்களை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் தலை இல்லாததால் அந்த உடல் பாகங்கள் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
இந்த வழக்கை தீவிரமாக விசாரித்த போலீசார், கொலை செய்யப்பட்டிருப்பது டெய்லர் பாபு என்பதைக் கண்டறிந்தனர். இதுதொடர்பாக மேலும் தீவிரமாக விசாரித்த போலீசார், இறைச்சிக் கடை ஊழியர் முகமது ரசூல் என்பவரைக் கைது செய்தனர். ரசூலிடம் நடத்திய விசாரணையில், அவர் பாபுவைக் கொன்றதை ஒப்புக்கொண்டார்.
இருவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோது கொடுக்கல் வாங்கல் தொடர்பாக பிரச்னை ஏற்பட்டதாகவும் அதனால் அவரைக் கொன்றுவிட்டதாகவும் அதனை மறைக்கவே உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசியதாகவும் ரசூல் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இச்சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
