Asianet News Tamil

செங்கல்பட்டில் பயங்கரம் – ஓட ஓட விரட்டி திமுக பிரமுகர் வெட்டி கொலை

murder in-chengalpet
Author
First Published Dec 4, 2016, 1:21 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp


செங்கல்பட்டு அருகே திமுக பிரமுகரை ஓட ஓட விரட்டி மர்மநபர்கள் சரமாரியாக வெட்டி கொலை செய்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம்  நிலவுகிறது.

சென்னை அடுத்த காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் வில்சன் (எ) கலையரசன் (45). திமுக மாவட்ட பிரதிநிதி. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர். இவரது மனைவி ரூபி. திருவடிசூலம் கிராம நிர்வாக உதவியாளராக வேலை பார்க்கிறார். இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று மாலை வில்சன் செங்கல்பட்டில் நடந்த திமுக நிகழ்ச்சிக்கு சென்றார். இரவு 8 மணியளவில் வீட்டுக்கு தனது பைக்கில் புறப்பட்டார். வீட்டின் அருகே சுமார் 100 அடி தூரத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கை இடிப்பதுபோல கார் ஒன்று வேகமாக வந்து நின்றது. இதனால் அதிர்ச்சியடைந்த வில்சன் பைக்கை நிறுத்தினார்.

அப்போது காரில் இருந்து இறங்கிய மர்மநபர்கள், அவரை சுற்றி வளைத்து மறைத்து வைத்திருந்த அரிவாளால் வெட்ட முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிக்க வில்சன், அலறி கூச்சலிட்டபடி, பைக்கை அங்கேயே போட்டுவிட்டு ஓடினார்.

ஆனால் மர்மநபர்கள், அவரை விடாமல் விரட்டி சென்று தலை, கை, கால், முதுகு என  உடல் முழுவதும் சரமாரியாக வெட்டினர். இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் துடிதுடித்து இறந்தார். இதற்கிடையில் வில்சனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். அதை பார்த்ததும், மர்மநபர்கள் காரில் ஏறி தப்பி சென்றனர்.

தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இதற்கிடையில் வில்சன் கொலை செய்யப்பட்டதை கண்டித்து, வல்லம் கிராமத்தை சேர்நத மக்கள் செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பும், பதற்றமும், கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர். ஆனால், அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து தடியடி நடத்தி அனைவரையும் கலைய செய்தனர்.

திமுக பிரமுகர் படுகொலை செய்யப்பட்டதை அறிந்ததும், அந்த பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதையொட்டி அங்கு பதற்றம் நிலவுகிறது. இதனால் வல்லம்  கிராமம் மற்றும் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, திமுக பிரமுகர் வில்சன், ரியல் எஸ்டேட் தொழில் போட்டியில் கொலை செய்யப்பட்டாரா, கட்சியில் முன் விரோதமா அல்லது வேறு காரணமா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை திமுக பிரமுகர் வில்சனை கொலை செய்த மர்மநபர்களை கைது செய்ய வலியுறுத்தி, பொதுமக்கள் மற்றும் திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செங்கல்பட்டு டிஎஸ்பி மதிவாணன், சம்பவ இடத்துக்கு சென்று, அவர்களிடம் சமரசம் பேசினார்.

அப்போது வல்லம் பகுதியில் இதுவரை ஏராளமான அரசியல் பிரமுகர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். தேமுதிக, திமுக கட்சியினர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பலர் கொலை முயற்சியில் இருந்து தப்பியுள்ளனர். போலீசார் இதனை தடுக்கவில்லை. குற்ற சம்பவங்கள் அதிகரித்து செல்கிறது என்றனர். அதற்கு, உண்மை குற்றவாளியை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

பின்னர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து சடலம் உறவிவனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை, வல்லம் கிராமத்தில் உள்ள வில்சன் வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைத்துள்ளனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios