நள்ளிரவில் வீடு புகுந்து திமுக பிரமுகரை கொலை செய்ய முயன்ற நபர் மீதும், பாமக பிரமுகர் மீதும் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அடுத்த ரெட்டிப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் செந்தில் (45). திமுக கிளை செயலாளர். இவரது மனைவி சந்தியா (40). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு செந்தில், சாப்பிட்டு முடித்து குடும்பத்துடன் தூங்கச்சென்றார்.

ள்ளிரவில் ஒரு கும்பல் செந்தில் வீட்டுக்கு வந்தது. வீட்டின் முன்புற கிரில் கேட் மற்றும் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தது. ஒருவர் மட்டும் உள்ளே சென்று செந்தில் மற்றும் குடும்பத்தினர் படுத்திருந்த அறைக்குள் நுழைந்தார். சத்தம் கேட்டு செந்தில் எழுந்தார். திடீரென அரிவாளால் செந்திலை வெட்ட முயன்றார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், அலறி கூச்சலிட்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் வசிப்பவர்கள் அலறியடித்து கொண்டு ஓடிவந்தனர். இதை பார்த்ததும், அந்த கும்பல் தப்பியது.

தகவலறிந்து பாலூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் ருக்மாங்கதன், எஸ்ஐ தமிழ்செல்வி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர்.

மேலும் இதுதொடர்பாக செந்தில் புகார் செய்தார். அதில், ‘கடந்த முறை ஊராட்சி மன்ற தலைவராக போட்டியிட்டு நான் தோல்வியை தழுவினேன். இந்த முறையும் போட்டியிடுகிறேன். எனக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தற்போது ஊராட்சி மன்ற தலைவராக தனசேகரன் என்பவர் இருந்து வருகிறார்.

அவர், பாமகவை சேர்ந்தவர். அவர் ஏற்கனவே என்னை மிரட்டியுள்ளார். அவரது தூண்டுதலின் பேரில் பாபு, ரீகன் ஆகியோர்தான் என்னை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என கூறியுள்ளார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். செந்தில் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.